வெற்றியை வழங்கும் குலசேகர நாதர்


குலசேகர நாதர்
x
குலசேகர நாதர்
தினத்தந்தி 26 Dec 2018 6:45 AM GMT (Updated: 26 Dec 2018 6:45 AM GMT)

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள தெற்கு காரசேரி, தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கியது நல்லூர். பிரமாண்டமான தேர்(கார்) ஓடிய சேரி கார்சேரி என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வடக்கே ஒரு காரசேரி இருந்த காரணத்தினால் இவ்வூர் தெற்கு காரசேரி என்று அழைக்கப்படுகிறது.

குலசேகரபட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோவில் கட்டினார். அந்தக் கோவில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்தும் மகிழ்ந்தார். குலசேகரபட்டினத்தில் இருந்து திருவாரூர் வரை இந்த 9 கோவில்களும் அமைந்திருந்தது. தெற்கு காரச்சேரியில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர், கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர் போன்ற கோவில்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்தக் கோவிலின் சிவன் சன்னிதியில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் இருந்து, ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதை உண்டு. தெற்கு காரசேரி ஆலயத்தின் பூஜையை முடித்து விட்டு, குலசேகர மன்னர் இந்த வழியாகத் தான் ஸ்ரீவைகுண்டம் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவும் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி உள்ளார்.

இக்கோவில் மிகவும் பிரமாண்டமானது ஆகும். ‘ஒரு சிறு கிராமத்தில் இப்படி ஒரு கோவிலா?’ என நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆலயத்தின் முன்புறம் பிரமாண்டமான தெப்பக்குளமும், கொடிமரம், பலி பீடம் மற்றும் மிகப்பெரிய நந்தி ஆகியவை வெளிபிரகாரத்தில் உள்ளன. கோவிலின் உள்புறம் நுழைந்தால் அங்கு சிவன் கிழக்கு நோக்கி சற்று இடது புறம் சாய்ந்து, பக்தர்கள் கோரிக்கையை செவிசாய்த்து கேட்கும் விதமாக காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

ஆலயத்தை பிரகார வலம் வந்தால், சுர தேவரும், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கன்னி மூலையில் விநாயக பெருமான், மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கு இடையே காசி விசுவநாதர் - விசாலாட்சி, சோமசுந்தரர்-மீனாட்சி அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். அதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி, நவக்கிரகம் என எல்லா தெய்வங்களும் உள்ளன. சுமார் 800 வருடங்களுக்கு முன் இந்த ஊர் மிக பெரிய பட்டினமாக இருந்துள்ளது. அதற்கு பல தடயங்கள் உள்ளன.

குலசேகரபாண்டியன் இந்த கோவில் நலனுக்காக மிகப்பெரிய குளம் ஒன்றை வெட்டினார். அதன் மூலம் பாசனம் பெறும் வண்ணம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை ஏற்படுத்தினார். அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு கோவிலுக்கு தினமும் 6 கால பூஜை நடக்க ஏற்பாடு செய்துள்ளான்.

ஆங்கிலேயர் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய சமயத்தில், சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காத பல கோவில்களை அடித்து நொறுக்கப்பட்டன. இக்கோவிலுக்கு வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் வந்து, கோவில் அருகே உள்ள பாறையில் நின்று கொண்டு “குலசேகரா” என்று இறைவனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டான்.

ஆனால் தெய்வம் பதில் அளிக்கவில்லை. இதனால் “கோவிலை தரைமட்டம் ஆக்குங்கள்” என்று கூறினான்.

உடனே ஆங்கிலேய படையினர் கோவிலை அடித்து நொறுக்க தயாரானார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பாறை மீது நின்ற குதிரை, அந்த துரையை கீழே தூக்கி வீசியது. இதில் நிலைகுலைந்து போன துரை கீழே விழுந்தான். குதிரை மறு நிமிடம் தனது காலால் மிதித்து அவனை கொன்று விட்டது. இதனைக் கண்ட மற்ற ஆங்கிலேயர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், தற்போது குதிரையின் கால் தடம் மற்றும் துரையின் கால் தடம், முட்டு, கை தடம் காணப்படுகிறது.

இக்கோவிலில் எல்லா விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை வருஷ பிறப்பு, வைகாசி விசாகம், பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, சஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம் உட்பட அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடந்து வருகிறது. குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்சினை வரும் போதெல்லாம் வெற்றி வேண்டுமென்றால் இக்கோவிலில் வந்து வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. வெற்றியை பெற்று தரும் கோவிலாக இத்தலம் விளங்கி வருகிறது.

இதனால் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறவும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் இங்கே வந்து வணங்கி செல்கிறார்கள். மேலும் நீண்டநாள் நோய், விபத்தில் ஏற்பட்ட பெரும் காயம் நீங்கி விடுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இங்குள்ள வள்ளி - தெய்வானை சமேத முருகன் முன்பு திருமணம் முடித்தால், குழந்தைப்பேறு நிச்சயம் என்பது ஐதீகம். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்
இந்த கோவிலுக்கு நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கருங்குளம் விளக்கு. இங்கிருந்து வலது பக்கமாக திரும்பி சென்றால் 6 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கு காரசேரி உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் கோவில் இருக்கிறது.

Next Story
  • chat