புராண கதாபாத்திரங்கள்


புராண கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 26 Dec 2018 7:44 AM GMT (Updated: 26 Dec 2018 7:44 AM GMT)

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

கல்கி
புராணங்களின் கூற்றுப்படி விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் இந்த கல்கி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை கலியுகத்தின் இறுதியில், தீய எண்ணங்களும், தீய சக்திகளும் மக்களை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் போது, அதை அழிப்பதற்காக மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் அவதாரம் என்று கூறப்பட்டிருக்கிறது. வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடன் கல்கியாக விஷ்ணு தோன்றுவார். கல்கி அவதாரம் தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் போது, கலியுகம் முடிந்து மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

காளிதாசர்
சமஸ்கிருத இலக்கியங்களில் சிறந்து விளங்கிய புலவர், காளிதாசர் ஆவார். இவர் நாடக கவிதை நடையில் எழுதிய ‘குமாரசம்பவம்’ என்னும் நூல் காவிய கவிதை களைக் கொண்டது. இந்த நூல் சிவ- சக்தி அருளால் உருவான குமரன் பிறப்பின் வரலாற்றைப் பற்றி விளக்குகிறது. இது கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. இது தவிர ரகுவம்சத்தில் பிறந்த ராமனின் வரலாற்றையும், அவர் அயோத்தியின் அரசராக இருந்த கதையையும் நூலாக்கியுள்ளார். ‘மேகதூது’ என்னும் கற்பனை படைப்பில், காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் காதலர்கள், மேகங்களை தூது அனுப்புவதாக கூறியிருக்கும் நயம் சிறப்பு வாய்ந்ததாகும். ‘அபிங்ஜனசகுந்தலா’, ‘மாலவிகாக்னிமித்ரா’, ‘விக்ரமோர்வசியா’ போன்றவை இவரின் மேலும் சிறந்த படைப்புகள். பேரரசர் விக்ரமாதித்யாவின் அரசவையை அலங்கரித்த புலவர்களில் ஒருவர் காளிதாசர் என்று சொல்லப்படுகிறது.

காலிங்கன்
கடலில் வசித்து வந்த காலிங்கன் என்ற ஐந்து தலை நாகம், கருடனுக்கு பயந்து யமுனை நதியில் தஞ்சம் அடைந்தது. காலிங்கன் கொடிய விஷம் கொண்ட நாகம் என்பதால், அதன் மூச்சுக் காற்றுபட்டு, யமுனை நதி முழுவதும் விஷமாகிப் போனது. இதனால் நதியில் தண்ணீர் அருந்தும் ஜீவராசிகள் மடிந்தன. யமுனை நதியின் கரையோரத்தில் இருந்த பசுமையான மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் கருகிப் போயின. பிருந்தாவன மக்கள் இதனால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். பாலகனாக இருந்த கிருஷ்ணர், இதனையெல்லாம் அறிந்து யமுனை நதிக்குள் சென்று காலிங்கனுடன் போரிட்டு அடக்கி, அதன் தலைகள் மீது நடனம் புரிந்தார். பின்னர் காலிங்கனை கடலுக்குச் செல்லும்படி கூறினார். கருடனுக்கு பயந்த காலிங்கனிடம், “என்னுடைய காலடி தடம் உன் தலையில் இருப்பதால் கருடனால் உனக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். இதையடுத்து காலிங்கன் யமுனை நதியில் இருந்து கடலுக்கு சென்றது.

கயிலாயம்
சைவ சமயத்தின் இறைவனாக இருக்கும் சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் வாசம் செய்வதாக நம்பப்படும் இடம் கயிலாயம் எனப்படும் கயிலை மலை. இது இமய மலையில் வடக்கு பகுதியில் உள்ளது. மானசரோவர் ஏரியும், சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன. இந்துக்களின் புனித தலங்களில் முதன்மையானதாக கயிலாயம் போற்றப்படுகிறது. ஆன்மாக்கள் மனித உடலை விட்டு பிரிந்ததும் சென்றடையும் இடம் கயிலாயம் என்றும் சொல்வார்கள். பகீரதன் என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்கள் நன்மை அடைவதற்காக, கங்கையை பூமிக்கு வரவழைக்க சிவபெருமானை வணங்கினான். அதன் மூலம் சிவபெருமான் கங்கையை பூமிக்கு வரவழைத்துக் கொடுத்தார்.

Next Story