தாமசா நதி


தாமசா நதி
x
தினத்தந்தி 26 Dec 2018 9:47 AM GMT (Updated: 26 Dec 2018 9:47 AM GMT)

இந்தத் தொடரில் ராமாயணம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் தாமசா என்ற நதியைப் பற்றிப் பார்ப்போம்.

காலம் மிக அற்புதமான மாய சக்தி.

மவுனமாகச் செல்லும் அதன் காரியங்கள்

ஒவ்வொன்றும் காரணத்துடன் கூடியது.

சாபத்தையும் வரமாக்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு.



தாமசா நதி வேதனையுடன் ஓடியது.அதன் கரையில், மார்பில் அம்பு பாய்ந்து கிடந்த ரிஷிகுமாரனைப் பார்க்கப், பார்க்க நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.

அந்தக் குழந்தையின் நெஞ்சைத் தடவி அம்பை எடுத்து, அவன் உயிரைக் காப்பாற்ற விரும்பினாள், அந்த நதி தேவதை.

எத்தனை வருடங்களாக அவளின் அமுத நீரை மொண்டு செல்கிறான் இவன். அவன் வரும்போதெல்லாம் தாமசாவுக்கு உற்சாகம் அதிகரித்து விடும்; மகிழ்ச்சியாக இருக்கும். இந்தச் சின்ன வயதில் எத்தனை பொறுமை, பெற்றோர்களுக்கான பணிவிடைகளை பொறுமையாகவும், அன்புடனும் செய்கிறான். நேர்மையான சிந்தனைகள், உயிர்கள் மீது அன்பு, சிரமம் பாராமல் கண் பார்வை அற்ற பெற்றோர்களுக்கு கண்ணாக இருக்கிறான்.

உற்சாகமான மனநிலையோடு, மகிழ்ச்சியை மட்டுமே சுமந்து பட்டாம்பூச்சியாகத் திரிபவன். குழந்தைப் பருவம். சிரிப்பும், பாடலுமாய் நீர் மொண்டு போக வரும் அவனுக்காகவே, புதிதாய்ப் பூத்த மலர்களை தன் புனலில் சுமந்து வருவாள் தாமசா. சுத்தமான நீரை அவன் குடத்தில் அள்ள, அவள் அதில் தூய்மையையும், நறுமணத்தையும் பொதித்து வைப்பாள்.

ரிஷி குமாரன் உதட்டில் எந்நேரமும் புன்னகை இருக்கும். வாயில் வேதம் மணக்கும். இதோ அம்பு பட்டு வீழ்ந்து கிடக்கும் தருவாயில் கூட அவன் உதட்டில் புன்னகை உறைந்திருக்கிறது.

இவன் துணை இல்லாமல் சலபேந்திரன் முனிவரும், அவர் மனைவியும் எப்படி வாழ்வார்கள்?

இப்படி நிகழும் என்று தாமசா நினைத்துக் கூட பார்க்கவில்லை.

ரிஷிகுமாரனின் இந்த நிலைக்கு காரணமாக அமைந்துவிட்ட தசரத சக்கரவர்த்தி கூட, இப்படி நிகழும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

காட்டில் வேட்டையாட வந்த தசரதர், வழி தவறி விட்டார். அந்த வனத்தில் தங்கிய அவர் மறுநாள் எழுந்து மீண்டும் வேட்டையாட நதிக்கரை ஓரம் வந்தார். அவருடைய வீரர்கள் அவரைத் தேடி வேறு பக்கம் சென்று விட, வேட்டையில் ஆர்வமுடைய தசரதர் வேறு வழியில் வந்து விட்டார்.

தூரத்தில் இருந்து ரிஷிகுமாரன் நீர் மொள்ளும் சப்தம், யானை நீர் அருந்துவது போல் அவருக்கு கேட்டது. சப்தத்தைக் கேட்டே இலக்கை தாக்கும் ‘சப்தவேதிகை’ என்ற அம்பை அவர் விட, அது நேராகச் சென்று ரிஷி குமாரனைத் தாக்கியது.

“ஆ! அம்மா” என்ற அலறல் சத்தம் கேட்டதும் தான், அதிர்ந்து போய் ஓடிவந்தார் தசரதர். மார்பில் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்த ரிஷி குமாரனைப் பார்த்து அவர் நடுங்கிப் போனார்.

“எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்? இறைவா! இந்தப் பாவத்தை எப்படிப் போக்குவேன்?” கலங்கிப் போனார். நேர்மை தவறாமல், சத்தியம் ஒன்றே இலக்காகக் கொண்டு நடக்கும் அவர், உயிர் இழந்த உடல் போல் கை, கால் இற்றுப் போனார்.

கண்ணீர் வழிய இருகரம் கூப்பி மன்னிப்பு வேண்டினார்.

“மன்னா, என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்காதீர்கள். என் தாய், தந்தை இருவருமே கண் பார்வை இல்லாதவர்கள். அவர்கள் என்னை நம்பியே இருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று விஷயத்தைக் கூறி அழைத்து வாருங்கள். நான் இறப்பதற்கு முன் அவர்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்றான்.

சலபேந்திரன் முனிவரை அழைத்து வர தசரதர் சென்றிருக்கிறார்.

தாமசா மனக் குமுறலோடு ரிஷி குமாரனை நெருங்கினாள். அவனை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது.

“வேண்டாம் தாமசா.” - ஒரு குரல் தடுத்தது.

அவளின் தாய் நதியாம் கங்கையின் குரல் அது. தாமசா, கங்கையை நெருங்கினாள்.

“இறைவன் வகுத்த திட்டத்தை மாற்றும் சக்தியோ, அதிகாரமோ நமக்கு இல்லை. நடப்பதை ஒரு பார்வையாளராகக் கவனித்திரு.” கங்கையின் சொல் தாமசாவுக்கு அதிர்ச்சியளித்தது.

“தாயே, இந்த இளம் வயதில் இவனுக்கு மரணம் ஏன்? இவன் பெற்றோர்கள் எப்படி இவன் இல்லாமல் உயிர் வாழ்வார்கள்?” தாமசா மனக் குமுறலுடன் பேசினாள்.

“அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. நடப்பதைக் கவனி தாமசா”

தாயின் சொல்லை தட்ட மனமில்லாமல், அப்படியே சிலை போல் நின்றாள் தாமசா.

இதோ சலபேந்திர முனிவர் தன் மனைவியுடன் கதறியபடி ஓடி வந்தார். அவர்களை அழைத்து வந்த தசரதன் வேதனையுடன் ஒதுங்கி நின்றார். ரிஷி குமாரன் மார்பில் புதைந்திருந்த அம்பை எடுத்தவுடன் “அம்மா” என்ற முனகலுடன் அவன் உயிர் பிரிந்தது. பெற்றோர்களின் அலறல் அந்த வனத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.

தசரதர் நடுங்கினார். “நான் செய்த தவறுக்கு எந்த தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கை கூப்பி வணங்கினார்.

“அரசே, தண்டனை தருவதால் எங்கள் மகன் எங்களுக்குக் கிடைக்க மாட்டான். அவன் இல்லாத உலகில் நாங்கள் இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு சிதை மூட்டித் தாருங்கள். எங்கள் மகனுடன் நாங்களும் நெருப்பில் இறங்க விரும்புகிறோம்.” சலபேந்திர முனிவர் அமைதியாகப் பேசினாலும், அவரது உள்ளக் குமுறலை தசரத சக்கரவர்த்தியால் உணர முடிந்தது.

முனிவருடன் வாதாட விரும்பாமல் சிதை மூட்டினார். முனிவர் தன் மனைவி கைப்பிடித்து தீயில் இறங்கும் முன் தசரதரை நோக்கி, “மன்னா, இந்த வயதான காலத்தில் நாங்கள் எங்கள் மகனைப் பிரிந்து தவிக்கிறோம். எங்கள் ஆதாரம் அவன். அவனாலேயே எங்களுக்கு வாழும் ஆசை வந்தது. பெற்றவர்களாகிய எங்களை அவன் பாதுகாத்தான். மரியாதையுடன், எங்கள் சுக துக்கங்களை பார்த்துப் பார்த்து கவனித்தான். அவனிடம் நாங்கள் குழந்தைகளாகிப் போனோம். அவனைக் கொன்று விட்டீர்கள். வயதான காலத்தில் நாங்கள் எங்கள் மகனைப் பிரிந்து தவிப்பது போல், நீங்களும் மகனைப் பிரிந்து தவித்து இறப்பீர்கள்.” சாபம் இட்ட முனிவர் மனைவியோடு தீயில் இறங்கி விட்டார்.

பல காலம் குழந்தை இல்லாமல் தவித்த தசரதருக்கு, முனிவரின் சாபமும் கூட வரமாக அமைந்தது. ‘மகனைப் பிரிந்து இறப்பாய்’ என்றால், மகன் இருக்கிறான் என்றுதானே அர்த்தம் என்று மகிழ்ந்த அவர் தன்னைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்த வீரர்களுடன் அயோத்தி கிளம்பிச் சென்றார்.

சாம்பலாகக் கிடந்த அந்த இடத்தைப் பார்த்து வெதும்பினாள் தாமசா.

“அநியாயமாக கொல்லப்பட்ட இவனின் பிறப்புக்கு என்ன அர்த்தம்?”

“தாமசா எந்த உயிரும் காரணமின்றிப் பிறப்பதில்லை. சலபேந்திர முனிவருக்கு இவன் மகனாகப் பிறந்து தசரதரால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி. ஒரு மகன் பெற்றோர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இவன். முனிவரால் தசரதனுக்கு சாபமும், அதன் மூலம் அவருக்கு புத்திர பாக்கியம் உண்டு என்பதை அறிவிக்கவும் காலம் செய்த நாடகம் இது.”

“எனில் ரிஷி குமாரனின் வாழ்க்கை?”

“அது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. இவன் அடுத்த பிறவியில் அணிலாகப் பிறப்பான். ராமர், ராவணனை வதம் செய்யக் கடலைக் கடக்கும்போது, கடலில் அணை கட்டும் பணியில் இவனும் உதவி செய்வான். அதில் மகிழ்ந்த ராமர் இவனை அன்போடு தடவித் தந்து, இவனை அடையாளம் கண்டு ஆசீர்வதிப்பார். அணில் தான் போகும் இடமெங்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு செல்லும்.”

கங்கை தொடர்ந்தாள்.

“ராமரால் அணிலின் முதுகில் போடப்பட்ட மூன்று கோடுகள், அவரின் சத்தியம், தர்மம், அனைத்து உயிர்களையும் நேசிக்கும் குணங்களைக் குறிக்கும்.” தன் மகளுக்கு விளக்கம் அளித்து விட்டு கங்கை மறைந்தாள்.

தாமசா மனம் சமாதானம் அடைந்து மீண்டும் நதியாக மாறிப் பாய ஆரம்பித்தாள்.

பின்னாளில் இலங்கை செல்ல கடலில் பாலம் கட்டும்போது, அங்கு சிறுசிறு உதவிகளைப்புரியும், அணிலாக பிறந்த ரிஷிகுமாரனை, அடையாளம் கண்டுகொண்டு, அதை அன்போடு தடவிக் கொடுக்கிறார் ராமபிரான்.

அணில் ஆனந்தத்தின் அடையாளம். துள்ளிக் குதித்து ஓடி, உற்சாகத்தைப் பரப்பி அனைவராலும் நேசிக்கப்படும் ரிஷி குமாரன்.

-தொடரும்.

Next Story