ஆன்மிகம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் + "||" + Thaipongal festival Tiruchendur Devotees accumulated in the Subramanya Swamy Temple

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய அவர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


காலையில் தை மாத உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவில் ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

நாளை (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பஸ், வேன், கார் போன்றவற்றில் திருச்செந்தூருக்கு வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பச்சை, காவி நிற ஆடை அணிந்து, குழுக்களாக பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் முருக பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது புகழை பாடியவாறு பக்தர்கள் பாத யாத்திரையாக அணிவகுத்து வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

கோவில் கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் கிரிப்பிரகாரத்தில் ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்தும், பெண்கள் அடிபிரதட்சணம் செய்தும் வழிபட்டனர். கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.