கர்த்தர் அடைக்கலமாக இருப்பார்


கர்த்தர் அடைக்கலமாக இருப்பார்
x
தினத்தந்தி 29 March 2019 10:28 AM GMT (Updated: 2019-03-29T15:58:27+05:30)

அகில உலகத்தையும் படைத்த கர்த்தர் பரலோகத்தின் சிங்காசனத்திலிருந்து மனுபுத்திரை கண்நோக்கி பார்க்கிறார். அவரிடத்தில் வாஞ்சையாய் இருக்கிற மனிதனின் எல்லா இக்கட்டான காலத்திலும் விடுவித்து அவனை உயர்ந்த ஸ்தானங்களில் வைக்கிறார்.

‘அவன் என்னிடத்தில் வாஞ்சையாய் இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்’ (சங்.91:14)

தேவனுடைய நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம். வேதத்தை வாசித்து அதன்படி ஜீவிதம் அமையும் போது உன் சத்துருக்களை துரத்தி, தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்.

‘மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்’ (நீதி. 29:25)

யோபு சொன்னார், ‘என்னைக்கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்’ என்று.

நாம் அவர்மேல் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மனுஷன் மேல் நாம் நம்பிக்கை வைத்தால் சமாதானத்தை இழந்து போவோம். மனுஷனை நம்பினால் நமக்கு கெடுதல் செய்வார்கள். நீங்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, நித்திய ராஜியத்தின் மேல் நம்பிக்கை வையுங்கள்.

‘என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும். என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்’ (சங்.59:1)

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். மான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல உன்னை தப்புவிப்பார். மலைகளின் இடுக்கில் வசிக்கும் முயல்களை தப்புவிக்கும் தேவன் உன்னை தப்புவியாமல் இருப்பாரோ?.

உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாக எழும்பும்போது, அவர்களால் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் செயல் இழந்து போகும். ஒரு வழியாய் உனக்கு எதிராக புறப்பட்டு வருவார்கள். ஆனால், ஆண்டவர் உனக்கு அடைக்கலமாக இருக்கும்போது ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்.

இயேசுவை நோக்கிக் கூப்பிடும் போது, நெருக்கப்படுகிற நாளில் பெலனாக இருப்பார். தீங்கு நாளில் அடைக்கலமாக இருப்பார். ஆபத்து நாளில் அரணான கோட்டையாக இருப்பார். நீ சமாதானமுள்ள தேசத்திலே குடியிருப்பாய்.

‘ஜனங்களே எக்காலத்திலும் அவரை நம்புங்கள். அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள். தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார்’. (சங்.62:8)

நீ தனிப்பட்டவனாக வாழ்க்கை நடத்தினாலும், குடும்பத்தாரால் நீ ஒதுக்கப்பட்டாலும், உன்னை அன்பு செய்ய யாரும் இல்லாது இருந்தாலும் உன் இருதயத்தை ஊற்றி தேவன் மேல் நம்பிக்கை வைத்து ஜெபிக்கும் போது, நீ சந்தோஷத்தில் மகிழ்ந்து தேவஅன்பில் நிலைத்திருப்பாய்.

அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன் என்று சொல்லுவாய். அவர் உனக்கு அடைக்கலம் ஆனதால் நீ அசைக்கப்படுவதில்லை. அவர் மகிமை உனக்கு பெலனாகும். அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள். சிறுமைப்பட்டவர்களுக்கு அடைக்கலமானவர்.

‘நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்’ (ஏசா.25:4).

அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார். ஏழைக்கு நமது கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும். ஏழையின் கூலியை பொழுதுபோகுமுன்னமே கொடுத்துவிட வேண்டும். பகலிலே வெயிலுக்கு நிழலாக இருப்பார். பெருங்காற்றுக்கும், மழைக்கும் அடைக்கலமாய் இருப்பார். ஏழை எளியவர்களுக்கு உன் கையைத் தாராளமாய் திறந்து தான தர்மஞ்செய். உன் தலைமுறை பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் பெருகும்.

வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான். அவன் நீதி என்றும் நிற்கும். அவர் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர். ஏழைகள் சுகமாய் இருப்பார்கள். ஏழைக்கு இரங்குகிறவன் தேவனுக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். ஏழை எளியவர்களின் கண்ணீரை துடைப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோகும், ஆமென்.

ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி. பூமணி, சென்னை-50.

Next Story