ஆவி - ஏவல் சக்திகளின் சாகசங்கள்


ஆவி - ஏவல் சக்திகளின் சாகசங்கள்
x
தினத்தந்தி 23 April 2019 9:33 AM GMT (Updated: 23 April 2019 9:33 AM GMT)

ஆன்மிகப் பயணத்தில் ஆத்ம சக்திகள்

நியூயார்க் செல்லாமல் நேரடியாக பிலடெல்பியாவுக்கு வந்த தபால்களோடு, கர்னல் ஓல்காட்டின் ஆச்சரியங்கள் முடிந்து விடவில்லை. அவர் பிலடெல்பியாவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் தங்கியிருந்த காலத்தில் அதிசய நிகழ்வுகள் தொடர்ந்தன.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆவிகளை, பல வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருந்தார். குறிப்பாக ‘ஜான் கிங்’ என்று அவர் பெயர் வைத்திருந்த ஆவி மூலமாக, நிறைய தகவல்களைப் பெற்றார். அந்த சமயங்களில் அவர் சொல்லச் சொல்ல அந்தத் தகவல்களை வேகமாக எழுதிக் கொள்ளும் வேலையை கர்னல் ஓல்காட் செய்தார். ஆரம்பத்தில் அவர் அந்தத் தகவல்களை துண்டுக் காகிதங்களில் எழுதி வைத்துக் கொள்வார். தேவைப்படும் வரை அவற்றைப் பத்திரமாக வைத்திருந்து, தேவை முடிந்த பிறகு அவற்றை வீசி எறிந்து விடுவார். சில சமயங்களில் அடுத்தவர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய காகிதங்களை, அவர் நிறைய நாள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது. அப்படித் துண்டுக் காகிதங்களைப் பத்திரப்படுத்தி வைப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கவே, அவர் ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி இனி அதில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தார்.

வீட்டுக்கு வந்த போது அவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து “அது எதற்கு?” என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்டார்.

“ஜான் கிங் ஆவி சொல்லும் குறிப்புகள் எழுதிக் கொள்ள” என்று கர்னல் ஓல்காட் விளக்கினார்.

அந்த நோட்டுப் புத்தகத்தைக் கையில் வாங்கவில்லை. தொடவும் முயற்சிக்கவில்லை. தூரத்தில் அமர்ந்தபடியே கர்னல் ஓல்காட்டிடம், அந்த நோட்டுப் புத்தகத்தை நெஞ்சோடு வைத்துக் கொண்டு சிறிது நேரம் நிற்கச் சொன்னார்.

கர்னல் ஓல்காட்டுக்கு, அவர் எதற்கு அப்படிச் செய்யச் சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனாலும் அவர் அப்படியே செய்தார். சிறிது நேரம் கழித்து அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்க்கும்படி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறினார்.

கர்னல் ஓல்காட் அந்த நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்த போது, அதன் முதல் பக்கத்தில் ஜான் கிங்கின் புத்தகம் என்று பென்சிலில் எழுதி இருந்தது. அதற்குக் கீழே அன்றைய நாளான நான்காவது மாதத்தின் நான்காவது நாள், வருடம் 1875 என்று எழுதியிருந்தது. அதற்குக் கீழே ஆன்மிகச் சின்னங்கள் சில வரையப்பட்டிருந்தன. அந்தச் சின்னங்கள் எளிமையானவை அல்ல. வரைவதற்குக் கடினமான சின்னங்கள் அவை. வாங்கிய புதிய நோட்டுப் புத்தகத்தில், அவரைத் தவிர வேறு யாருமே தொட்டிராத நோட்டுப் புத்தகத்தில் அன்றைய தேதியுடன் ஜான் கிங்கின் பெயர் எழுதப்பட்டிருந்ததும், பார்த்து வரையவே மிகவும் கடினமான ஆன்மிகச் சின்னங்கள் வரையப்பட்டிருந்ததும் கர்னல் ஓல்காட்டை வியப்பில் ஆழ்த்தின.

அதெல்லாம் எப்படிச் சாத்தியமானது என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விளக்கவில்லை. அந்த எழுத்துக்கள் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடையதாக இருக்கவில்லை என்பது உபரிச் செய்தி. பல வருடங்கள் கழிந்த பின் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த போதும், அப்படியே அந்த எழுத்துக்களும் சின்னங்களும் இருந்தன என்று கர்னல் ஓல்காட் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார்.

ஆவிகளைப் பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகளை நடத்திக் காட்டிய ப்ளாவட்ஸ்கீ அம்மையார், சில ஏவல் சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதை கர்னல் ஓல்காட் காலப்போக்கில் அறிந்து கொண்டார். ஒரு முறை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் துவாலைகள் தீர்ந்து விடவே கர்னல் ஓல்காட் ஒரு நீளமான துணியை வாங்கி வந்து, அதை இருவருமாகச் சேர்ந்து பத்துப் பன்னிரண்டு துவாலைகளாக வெட்டி வைத்தார்கள்.

துவாலைகளை நான்கு பக்கங்களிலும் மடித்துத் தைக்கும் முன்பே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒன்றை எடுத்துப் பயன்படுத்த, “தைத்துப் பயன்படுத்த முடியாத அளவுக்கு என்ன சோம்பேறித்தனம்?” என்று அவரை கர்னல் ஓல்காட் கடிந்து கொண்டார். உடனே ஊசி, நூல் எடுத்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தத் துவாலையைத் தைக்க ஆரம்பித்தார். பல அற்புத சக்தி களைப் பெற்றிருந்த போதும் அடிப்படை வேலைகள் பலவற்றில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பின் தங்கி இருந்தார். கோணல் மாணலாகத் தான் அந்தத் துவாலையை அவர் தைத்தார்.

அப்போது அவர் மேசையின் அடியில் இருந்து விசித்திர சத்தங்கள் கேட்டன. உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “சும்மா இருக்க மாட்டாயா? அந்தப் பக்கம் போ முட்டாளே” என்று கீழே பார்த்துச் சொல்ல, கர்னல் ஓல்காட் “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“என் ஏவல்சக்தி ஒன்று என்னைத் தொந்தரவு செய்கிறது. வேறு எதையோ செய்யச் சொல்கிறது” என்று பதிலளித்தார், ப்ளாவட்ஸ்கீ அம்மையார்.

கர்னல் ஓல்காட் “அப்படியானால் அந்தத் துவாலைகளைத் தைக்கும் வேலையை, அந்த ஏவல் சக்தியிடமே தர வேண்டியது தானே. அதற்கும் ஒரு வேலை கொடுத்த மாதிரி இருக்கும். மேலும் அது உங்களை விட நன்றாகத் தைக்கும்” என்று வேடிக்கையாகச் சொன்னார்.

வாய் விட்டுச் சிரித்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார், அந்த ஏவல் சக்தியிடம் அந்த வேலையை ஒப்படைக்கச் சிறிது தயங்கினார். ஆனால் கர்னல் ஓல்காட்டுக்கு இந்த மாதிரி வேலைகளையும் அந்த ஏவல் சக்திகள் செய்ய முடியுமா என்று அறியும் ஆவல் இருந்தது. அதனால் அவர் வற்புறுத்தினார்.

பின் ஒத்துக் கொண்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார், அந்தத் துவாலைகளையும், ஊசி மற்றும் நூலையும் சேர்த்து அலமாரியில் வைக்கும்படி கர்னல் ஓல்காட்டைக் கேட்டுக் கொண்டார். அவர் சொன்னபடியே கர்னல் ஓல்காட், அறையின் மூலையில் கண்ணாடிக் கதவு இருந்த ஒரு புத்தக அலமாரியில் துவாலைகள், ஊசி, நூல் மூன்றையும் சேர்த்து வைத்து விட்டு வந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அருகே அமர்ந்தார். இருவரும் ஆன்மிக விஷயங்களையும், தத்துவார்த்த விஷயங்களையும் பற்றி சுவாரசியமாகப் பேச ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரைத் தவிர வீட்டில் மனிதர்கள் வேறு யாரும் இல்லை.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, மேசையின் அடியிலிருந்து மறுபடியும் விசித்திர சத்தம் கேட்டது. கர்னல் ஓல்காட் என்னவென்று கேட்க, ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “அது தைக்கும் வேலையை முடித்து விட்டதாம்” என்று சொல்லியிருக்கிறார்.

கர்னல் ஓல்காட்டுக்கு உண்மையில் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. எழுந்து போய் அலமாரியின் கண்ணாடிக் கதவைத் திறந்து பார்த்த போது உண்மையாகவே அனைத்துத் துவாலைகளும் தைக்கப்பட்டிருந்தன. அதுவும் கோணல் மாணலாகத் தான் இருந்தது என்றாலும், அந்த வேலை அந்த ஏவல் சக்தியால் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதே கர்னல் ஓல்காட்டுக்குப் பிரமிப்பாக இருந்தது.

உண்மையான ஆன்மிகத்தில் இது போன்ற ஆவி, ஏவல் சக்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அவர்கள் உருவாக்கிய தியோசபிகல் சொசைட்டியின் நோக்கமும் இது போன்ற சக்திகளை ஊக்குவிப்பதோ, பிரயோகிப்பதோ இல்லை. பூகோள எல்லைகளைக் கடந்து மொழி, இனம், மதம் ஆகியவற்றையும் கடந்த ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போன்றவர்கள் இந்த சில்லறை சக்திகள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி அவற்றையும் பயன்படுத்திக் கொண்டே ஆன்மிகம் மற்றும் உலக சகோதரத்துவத்தை வளர்க்க முற்பட்டார்கள்.

இந்தச் சக்திகளைப் பயன்படுத்தியது போலவே, ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆன்மிக உயர்சக்தி மனிதர்களான மகாத்மாக்களையும் அவ்வப்போது தொடர்பு கொண்டு வந்தார். சில நேரங்களில் ஓய்வுக்காக தன் அறைக்கு செல்லும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார், அந்த அறையிலும் இல்லாமல் போவதையும் கர்னல் ஓல்காட் கவனித்திருக்கிறார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்வதையும் பார்த்திருக்காததால், வீட்டுக்குள்ளேயும் அவர் இல்லாமல் போவது கர்னல் ஓல்காட்டைத் திகைப்பில் ஆழ்த்தும். வீடு முழுவதும் தேடி அவரைக் காணாமல் கர்னல் ஓல்காட் குழம்பி இருக்கையில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அமைதியாகத் தன் அறையில் இருந்தே வெளியே வருவதுண்டு.

“எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று கர்னல் ஓல்காட் கேட்டால் “முக்கிய வேலை இருந்ததால் அதைச் செய்து விட்டு வர மறந்து விட்டேன்” என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிரித்தபடியே சொல்வதுண்டு. அதற்கு மேலான விளக்கங்கள் அவரிடமிருந்து வந்ததில்லை.

என்.கணேசன்

Next Story