ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள்


ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள்
x
தினத்தந்தி 23 April 2019 10:32 AM GMT (Updated: 23 April 2019 10:32 AM GMT)

கிராம தேவதை வழிபாடு என்பது, இன்றைய காலகட்டத்திலும் மக்களின் நம்பிக்கை சார்ந்த நெறிமுறையாக இருந்து வருகிறது.

பல நூற்றாண்டுகளாக தமிழக மண்ணில் வழிபாட்டு முறைகள் ஆழமாக பதிந்துள்ளதை, நகர்ப்புற சாலைகளில் உள்ள கோவில்கள் மூலமாக நாம் உணர முடியும். அவை, வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல், பலரது வாழ்வில் அவற்றின் வழிபாடுகள் ஒரு அங்கமாகவும் மாறி இருக்கின்றன.

கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம். அதாவது, தென்னகத்தில் சிருங்கேரி பீடத்தை ஸ்தாபனம் செய்த அவர், சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தேவதைகளாக கால பைரவர், அனுமன், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கான வழிபாட்டு நியமங்களையும் அமைத்துக்கொடுத்தார்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். அனுமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறாள். ஆனாலும் அவளுடன் சண்டையிட்டு வென்ற பின்னரே, அனுமனால் இலங்கைக்குள் நுழைய முடிந்தது. இந்தக் கதை நமது இந்திய கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லை காவல் தேவதை பற்றிய அடிப்படை தகவலை அளிக்கிறது.

அதாவது, ஒரு கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கையான மற்றும் செயற்கையான பாதிப்புகள் நுழையாதபடிக்கு, எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாக கிராம தேவதைகள் திகழ் கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வழிபாடுகள் மற்றும் பலி பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இன்றைய நிலையிலும் ஊருக்கு மத்தியில் உள்ள கோவில் திருவிழா சமயத்தில், அப் பகுதியில் உள்ள கிராம தேவதைக்கு என்று தனிப்பட்ட பலி பூஜைகள் செய்யப்பட்டு, அவற்றின் உத்தரவு கேட்டு பின்னர் ஊரில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கிராம தேவதைகளில் வீரபத்திரர் முக்கியமான இடத்தில் உள்ளார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில், அவருக்கு ஆகம முறையில் பூஜைகள் செய்யப்பட்டன. கிராம தேவதையான முனீஸ்வரர், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டவர் என்றும், அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்ததாகவும் ஐதீகம்.

தமிழகத்தில் பரவலாக இருக்கும் கிராம தேவதை வழிபாட்டில் மாரியம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அன்னை பாம்புப் புற்றில் இருந்து வெளியானவள். மழையைப் பொழிய வைப்பவள், நோய்களை தீர்ப்பவள் என்ற ரீதியில் தொடக்க காலங்களில் மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அன்னை பார்வதியின் அவதாரமாக ஏற்கப்பட்டு, ஆகம முறையிலான பூஜைகள் செய்யப்பட்டன. சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டை ஸ்ரீஆதி மொட்டையம்மன் கோவில், முன்னர் கிராம ஆலயமாக இருந்தது. அதேபோல் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோல விழி அம்மன், தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில் ஆகிய அனைத்தும், முன்காலத்தில் கிராம தேவதை களாக இருந்து, பிரதான ஆலயங் களாக வளர்ச்சி அடைந்தவை.

இன்று பிரசித்தி பெற்ற கோவில்களாக திகழும் பலவும், கிராம ஆலயங்களாக இருந்து, காலப்போக்கில் பூஜைகள் விரிவாக செய்யப்பட்டு பிரதான ஆலயங்களாக மாறி இருக்கின்றன.

பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் தெய்வம் என்று, கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன், சரஸ்வதியின் அவதாரம் என்பதும், பக்தர்களின் மன விருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளான இசக்கி அம்மன், பார்வதியின் அவதாரம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில், எல்லை தேவதைகள் அமைத்து வழிபடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு, அவை வெவ்வேறு சக்தி நிலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இன்றும் உள்ளன. அந்த சக்திகளின் மீதான நம்பிக்கை அடிப்படையில் தான், மக்கள் நிம்மதியாக அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்கள்.


Next Story