திருப்பங்களை ஏற்படுத்தும் திருப்பதி தரிசனம்


திருப்பங்களை ஏற்படுத்தும் திருப்பதி தரிசனம்
x
தினத்தந்தி 30 April 2019 5:46 AM GMT (Updated: 30 April 2019 5:46 AM GMT)

ஆகாச ராஜனின் மகள்தான் பத்மாவதி தாயார் என புராணங்கள் கூறுகின்றன

தொண்டைமான் சக்கரவர்த்தி தற்போதைய இடத்தில் ஆனந்த நிலையம் எனப்படும் கோவிலை நிறுவியுள்ளார். இவர் ஆகாச ராஜனின் சகோதரர் ஆவார். ஆகாச ராஜனின் மகள்தான் பத்மாவதி தாயார் என புராணங்கள் கூறுகின்றன.

கடந்த 1944-ம் ஆண்டு வரை பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு, மாமண்டூரில் உள்ள அன்னமய்யா பாதை உட்பட 4 வழிகள் மூலம் திரு மலைக்கு சென்றனர். இந்த வழிகளில் கொடிய மிருகங்கள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை தாண்டி நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

1944-ல் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இப்போது தினமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.


பத்மாவதி தாயார் பிரம்மோத்ஸவம்திருமலை வேங்கடவன் வலது மார்பில் மகாலட்சுமியும், இடது மார்பில் பத்மாவதியும் இருப்பதாக ஐதீகம். திருச்சானூர் என்னும் அலமேலுமங்காபுரத்திலிருந்து அருள்பாலித்து வரும் தாயாருக்கு, பத்மாவதி என்ற பெயர் வழங்கப்படுகிறது. திரு மலையை தரிசனம் செய்ய வந்தவர்கள் இந்த தாயாரை வழிபட்டுவிட்டு, திரும்பி சென்றால்தான் திருமலைக்கு வந்த நோக்கம் பூர்த்தியடைவதாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமி அதாவது வளர்பிறை ஐந்தாவது நாளன்று அங்கு பிரம்மோத்சவம் தொடங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.

தாயாரின் பிரம்மோத்சவத்தின் கடைசி நாளன்று திருமலை வேங்கடவன் கூரைச்சேலை, ஆபரணங்கள் மலர் மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் விமரிசையாக, மேளதாளத்துடன் வருகை புரிவார். அவர் கொண்டு வந்த ஆடை, அணி கலன்களை தாயார் அணிந்து கொண்ட பின்புதான், கடைசி நாள் உற்சவம் நடைபெறுகிறது. மன்னன் தொண்டைமானின் கனவில் வந்து திருவேங்கடவன் கூறியதன் அடிப்படையில் பத்மாவதி தாயார் கோவில் அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் உள்ளன.

திருப்பதியில் கேட்கும் வெங்கடேச ஸ்தோத்திரம்திருப்பதி தலத்தில் காலையில் நமது காதுகளில் விழுவது சுப்ரபாதம் எனப்படும் திருப்பள்ளி எழுச்சி பாடலாகும். அதன் பின்னர் வெங்கடேச ஸ்தோத்திரம் என்ற பாடல் ஒலிக்கும். பிரசித்தி பெற்ற அதை அருளியவர் மார்க்கண்டேய மகரிஷி ஆவார். அதில் `விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத..’ என்ற வரிகளை பலரும் அறிவார்கள். அதன் அர்த்தமானது ‘உன்னை தவிர வேறு தெய்வமில்லை.. உன்னையே சரணடை கிறேன்..’ என்பதாகும். அவ்வாறு போற்றி வழிபட்ட மார்க்கண்டேய மகரிஷிக்கு வேங்கடவனின் அருள் உடனடியாக கிடைத்ததாக ஐதீகம். திருப்பதி செல்லும் அனைவருமே அவ்வாறு பிரார்த்தனை செய்தால் நமக்கு அவனது அருள் நிச்சயமாக உண்டு. இதை திருமலைவாசன் வேறொரு விதமாக சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

‘என்னை கோவிந்தா என்று ஒரு முறை அழைத்தால் உனக்கு நான் கடன்பட்டவன் ஆகிறேன். இரண்டாவது முறை கோவிந்தா என்று அழைத்தால் அந்த கடனுக்கு வட்டி கொடுப்பேன். மூன்றாவதாக கோவிந்தா என்று அழைத்தால் அந்த வட்டிக்கு வட்டி தருவேன்..’ என்று திருவேங்கடவன் சொல்லியிருப்பதாக மகரிஷிகள் அருளியுள்ளார்கள். அதனால்தான் ‘கோவிந்தா..’ என்ற கோஷம் திருமலை முழுவதும் எதிரொலிக்கிறது. குபேரனுக்கு மட்டும் கடன்பட்டவராக இல்லாமல் அவனது நாமத்தை உச்சரிப்பவருக்கும் அவன் கடன்பட்டவனாக ஆவது விசித்திரமான கலியுக ஆன்மிக நியதியாக வேங்கடவன் விஷயத்தில் விளங்கி வருகிறது.

திருமலை வேங்கடவனை தரிசனம் செய்யும் முறை


நமது பாரத நாட்டில் உள்ள சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் `வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதி பக்தர்களின் மனம் கவர்ந்த ஒன்றாகும். அங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார். `திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும்..’ என்ற சொல் வழக்கு பக்தர்களிடையே பிரபலமானது. பொதுவாக, திருப்பதி செல்பவர்கள் மலை ஏறியவுடன் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை. அதற்காக ஆன்றோர்களால் வரையறை செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றை பற்றிய குறிப்பை இங்கே காணலாம்.

* முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்தராஜ பெருமாளை வணங்க வேண்டும்.

* அதன் பிறகு, அலர்மேல்மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.

* அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு `வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் `வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.

* அதற்கு பிறகுதான் மலையப்பன் என்றும், ஏழுமலை வாசன் என்றும் சொல்லப்படும் திருவேங்கடவனை வழிபட வேண்டும்.

மேற்கண்ட வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டது ஆகும். அவருக்கு பின்னர், வந்த அனைத்து ஆச்சாரியர்களும் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயம் இதுவாகும்.

ஏழு மலைகள்:


திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

ஏழு தீர்த்தங்கள்: திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை, குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி என்பவையாகும்.

ஏழு பெயர்கள்: பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை : ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.

ஏழு தலை ஆதிசேஷன்:ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரம்மோத்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் `பெத்தசேஷ வாகனம்’ என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.

ஏழு இடங்கள்: கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சாமி சன்னதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.

ஏழு கலச ராஜகோபுரம்: திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு ஏழு உலகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏழு மகிமைகள்: திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, சீனிவாச மகிமை, தல மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.


Next Story