நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்


நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்
x
தினத்தந்தி 19 July 2019 11:45 AM GMT (Updated: 19 July 2019 11:45 AM GMT)

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன.

சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

பரிவர்த்தனை யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் இடம் மாறி அமர்ந்திருப்பது பரிவர்த்தனை யோகமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, மேஷ ராசி அதிபதியான செவ்வாய், தனுசு ராசியிலும், தனுசு ராசி அதிபதியான குரு, மேஷ ராசியிலும் அமர்ந்திருப்பது பரிவர்த்தனை ஆகும். அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பரிவர்த்தனை யோகம் என்று குறிப்பிடப்படும். கிரகங்கள் இவ்வாறு மாறி அமரும் நிலையில், அவற்றின் வலிமை கூடுவதாக ஜோதிடம் சொல்கிறது. அத்தகைய பரிவர்த்தனை யோகமானது சுப பரிவர்த்தனை, தைன்ய பரிவர்த்தனை, கஹல பரிவர்த்தனை என்று மூன்று வகையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப பரிவர்த்தனை

லக்னம், 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு உரிய கிரகங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் மாறி இருப்பது சுப பரிவர்த்தனை யோகம் ஆகும். அதன் காரணமாக, ஜாதகர் சொந்த வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றுடன் செல்வாக்கும் பெற்றிருப்பார்.

தைன்ய பரிவர்த்தனை

சுய ஜாதக ரீதியாக 6, 8, 12 ஆகிய அசுப இடங்களுக்குரிய கிரகங்களுக்குள் ஏற்படுவது இந்த பரிவர்த்தனையாகும்.

கஹல பரிவர்த்தனை

லக்னத்திலிருந்து, மூன்றாம் வீட்டுக்குடைய கிரகம் லக்னம், 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் அமரும் நிலையில், அந்த இடங்களுக்கு உரிய கிரகம் அல்லது கிரகங்கள் 3-வது வீட்டில் அமர்ந்து இருப்பது கஹல பரிவர்த்தனை யோகமாகும். உபஜெயஸ்தானமான 3-ம் இடம் குறிப்பிடும் தைரியம் காரணமாக ஜாதகர் பல வெற்றிகளை பெறுவார்.

லக்ன அதிபதியும், 5-ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் புகழ் பெற்று விளங்குவதுடன், வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது புகழ் பல காலத்துக்கும் நிலைத்திருக்கும்.

ஒருவரது சுய ஜாதக ரீதியாக 2-ம் இடத்தின் அதிபதியும், 11-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றால், அவருக்கு வருமானம் பல வழிகளில் கிடைக்கும். படிப்படியாக பொருளாதார நிலை உயர்ந்து அந்தஸ்து கொண்டவராக மாறுவார்.

2-ம் இடத்தின் அதிபதியும் 9-ம் இடத்தின் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். சகல சவுபாக்கியங்களை பெறுவதுடன், வேதங்களை கற்றவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். பெரிய அளவிலான நண்பர்கள் வட்டாரம் இவர்களுக்கு உண்டு.

9-ம் வீட்டு அதிபதியும், 10-ம் வீட்டு அதிபதியும் பரிவர்த்தனை பெற்றவர்கள் அந்தஸ்து, அதிகாரம், புகழ், தெய்வபக்தி ஆகியவற்றைப் பெறுவார்கள்.

இந்திர யோகம்

ஜென்ம லக்னம் ஸ்திர ராசியாக அமைந்து, லக்னாதிபதி 11-ம் இடத்திலும், 11-ம் அதிபதி லக்னத்திலும், 2-ம் வீட்டு அதிபதி 10-ம் வீட்டிலும், 10-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்டிலும் மாறி அமர்ந்துள்ள சுய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் இந்திர யோகம் பெற்றவர்கள் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கார், பங்களா, செல்வச்செழிப்பு, மக்களின் மதிப்பு, அரசாங்கத்தால் நன்மைகள், பட்டம், பதவி ஆகியவற்றை இளம் வயது முதலாகவே பெறுவார்கள்.

சமுத்திர யோகம்

சுய ஜாதக ரீதியாக 7-ம் வீட்டு அதிபதியும், 9-ம் வீட்டு அதிபதியும், பரிவர்த்தனை பெற்றிருப்பது சமுத்திர யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் இளமையில் சிரமப்பட்டாலும், தங்களது மத்திய வயதுகளிலிருந்து வாழ்க்கையில் சுப பலன்களை அடைவார்கள் என்று ஜோதிடம் குறிப்பிட்டுள்ளது.

Next Story