கேதுவால் கிடைக்கும் நன்மைகள்


கேதுவால் கிடைக்கும் நன்மைகள்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:06 AM GMT (Updated: 20 Aug 2019 11:06 AM GMT)

உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால், உடலில் சூட்சுமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு இணையாக கேது கிரகத்தை ஒப்பிடலாம்.

குண்டலினி சக்தியைப் பாம்பாக உருவகப்படுத்துகிறார்கள். இந்து மதத்தில் பாம்பை வணங்கும் வழிபாட்டு முறையும் இருக்கிறது. பல இடங்களில் கடவுளின் சிலையுடன் பாம்பு இருப்பதைப் பார்க்கிறோம்.

உண்மையில் பாம்பு, குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ‘ஏன் பாம்பு?’ என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது, அதன் இருப்பை அறிந்து கொள்வது மிகவும் கடினம். சரசரவென்று ஓடும்போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி சக்தியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான், அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும்.

அதேபோல் உலக வாழ்க்கை என்னும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை அடக்கி, முக்தி அடையச் செய்பவர் கேது. முக்தியை ஆன்மா நாடும் வரை அனுபவப் பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் கேது பகவானின் வேலை. ஆன்மாவின் முக்திக்கு உதவுபவர் கேது என்றால் அது மிகையல்ல. தடையில்லாத குண்டலினி சக்தி, ஆன்மாவுடன் ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படி செல்ல வேண்டுமோ அதே வழியில் ஆன்மா செல்லும்.

கேதுவுக்கு ‘செம்பாம்பு, கதிர், பகை, சிகி, ஞானி’ போன்ற பெயர்கள் உள்ளன. மனித உறுப்புகளில் சிக்கலான நரம்பு மண்டலம் கேதுவுக்கு உரியது. உறவுகளில் தாய் மற்றும் தந்தை வழி பாட்டிகளை இது குறிக்கும். வழக்காடும் இடம், தையல் கடை, நெசவு செய்யும் இடம் போன்றவை கேதுவுக்கு உரியது ஆகும்.

ராகுவைப் போலவே கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும் தன்மை இவருடையது. தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பவர்.

பாம்பின் தலைப் பகுதியை ராகுவாகவும், வால் பகுதியை கேதுவாகவும் உருவகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே ‘வால்’ போன்று தொங்கும் எல்லா பொருட்களும் கேதுவாகும். தலைமுடி, கயிறு, நூல் போன்றவை பாம்பின் வால் போன்ற தோற்றமுடையவை. தலைமுடி, கயிறு, நூல் ஆகியவற்றில் முடிச்சுகள் விழுந்தால் நீக்குவது கடினம். துண்டு துண்டாக வெட்டித்தான் எடுக்க வேண்டும். மனித வாழ்வில் ஏற்படும் தடை, தாமதம், வம்பு, வழக்குகளின் மூலமாக பிரிவினையை ஏற்படுத்துபவர் கேது. கயிறு, கட்டுவதற்கு பயன்படும் பொருள். பாம்பு தன் பிடியில் உள்ள பொருளை வாலினால் சுற்றி இயங்க விடாமல் கட்டிப்போடும். அதே போல் தன் பிடியில் உள்ள மனிதனை இயங்க விடாமல் கட்டிப் போடுபவர் கேது.

நிழல் கிரகமான கேது, ஒருவரது ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால், அந்த நபர் ஒல்லியான, குள்ளமான தோற்றத்துடன் இருப்பார். எப்போதும் உஷாராக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள். கேது சுபத் தன்மை பெற்றால் ஞானம், மோட்சம், புண்ணிய தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம் போன்றவை கிடைக்கும்.

அதுவே கேது பலம் இழந்திருந்தால், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடங்கள், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் போன்ற துர்பலன்கள் ஏற்படும்.

தெய்வங்களில் விநாயகருக்கு துதிக்கையும், ஆஞ்சநேயருக்கு வாலும் உண்டு. கேது கிரகம், வாலை குறிப்பது என்பதால், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டால், கெடுபலன்களில் இருந்து ஓரளவு தப்பிக்க வழி ஏற்படும். விழுதுகளைக் கொண்ட ஆலமரம், கேதுவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே ஆலமரத்தை வழிபாடு செய்யலாம். தவிர சடைமுடி, தாடி வைத்திருக்கும் சாதுக்கள், சன்னியாசிகளிடம் ஆசிபெறலாம். ஆந்திர மாநிலம் காளகஸ்தி சென்று வழிபட்டு வந்தால் இன்னல்கள் நீங்கும்.

கேதுவைப் பற்றி..

நிறம் - சிவப்பு

தேவதை - இந்திரன், சித்ரகுப்தன்

பிரத்யதி தேவதை - நான்முகன்

ரத்தினம் - வைடூரியம்

மலர் - செவ்வல்லி

குணம் - குரூரன்

ஆசன வடிவம் - முச்சில்

தேசம் - அந்தர்வேதி

சமித்து - தர்ப்பை

திசை - வடமேற்கு

சுவை - புளிப்பு

ராகம் - ஷண்முகப்ரியா

உலோகம் - துருக்கல்

வாகனம் - சிங்கம்

பிணி - பித்தம்

தானியம் - கொள்ளு

காரகன் - பாட்டி, ஞானம், மோட்சம்

ஆட்சி - இல்லை

உச்சம் - விருச்சிகம்

நீச்சம் - ரிஷபம்

மூலத் திரிகோணம் - மீனம்

நட்சத்திரங்கள் - அசுவினி, மகம், மூலம்

பாலினம் - அலி

திசை காலம் - 7 வருடங்கள்

கோசார காலம் - 11/2 வருடம்

நட்பு - சனி, சுக்ரன்

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - புதன், குரு

உபகிரகம் - தூமகேது

தலம் - கீழ்பெரும்பள்ளம்

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story
  • chat