ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த மார்கழி


ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த மார்கழி
x
தினத்தந்தி 17 Dec 2019 9:32 AM GMT (Updated: 17 Dec 2019 9:32 AM GMT)

மாதங்களில் சிறப்பான மாதம் என்று ஆன்மிகத்தால் கொண்டாடப்படும் மார்கழி மாதம், இன்று (17-12-2019) பிறக்கிறது.

இன்று மார்கழி மாதப்பிறப்பு

ன்மிகமும், அறிவியலும் வெவ்வேறு துருவங்கள் என்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், பல விஷயங்களில் இரண்டும் ஒரே கருத்தைக் கொண்டு, ரெயில் தண்டவாளக் கம்பிகள் போல இணைந்து பயணிப்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்தகைய சிறப்பைக் கொண்டு இருப்பவற்றில், மார்கழி மாதமும் ஒன்று.

மாதங்களில் சிறப்பான மாதம் என்று ஆன்மிகத்தால் கொண்டாடப்படும் மார்கழி மாதம், இன்று (17-12-2019) பிறக்கிறது. ஒரு சிலர் இந்த மாதத்தைப் ‘பீடை மாதம்’ என்றும், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளுக்கு இது உகந்த மாதம் அல்ல என்றும் கூறுவது உண்டு.

ஆனால் பகவத் கீதை 10-வது அத்தியாயத்தில், கிருஷ்ணர் “மாதங்களில் நான் மார்கழி” என்று பெருமையோடு சிறப்பித்துக் கூறுவதை ஆன்மிகவாதிகள் சுட்டிக் காட்டத் தவறுவது இல்லை.

மார்கழியின் மகிமையை இந்து ஆன்மிகம் மேலும் பல வழிகளிலும் வெளிப்படுத்தி இருக்கிறது. மனிதர்களின் ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது. எனவே, தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான காலம், தேவர்களுக்கு பகல் பொழுது என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தேவர்களுக்கு இரவுப் பொழுது என்றும் கணக்கிடு கிறார்கள். இரவு காலம் முடிந்து பகல் விடியும் அதிகாலை நேரமாக மார்கழி மாதம் கருதப்படுவதால், அந்த மாதம் சிறப்பானது என்று போற்றப்படுகிறது.

சூரியன் வட திசையில் இருந்து தென் திசை நோக்கிப் பயணம் செய்யும் 6 மாத காலம் ‘தட்சிணாயனம்’ என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் 6 மாத காலம் ‘உத்தராயனம்’ என்றும் கூறப்படுகிறது. புனிதமானதாகக் கருதப்படும் உத்தராயன காலம், மார்கழி மாதத்தில் தான் (ஜனவரி 14, 15 தேதிகளில்) தொடங்குகிறது.

சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை எடுப்பதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது முதலில் கடலுக்குள் இருந்து வெளிவந்த, மிகக் கொடிய ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு, மக்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றினார். இது நிகழ்ந்தது ஒரு மார்கழி மாதத்தில் தான் என்பது புராணம் தரும் தகவல்.

இந்திரன், கோகுலத்தில் இடி- மின்னலுடன் கூடிய பெரும் மழையை உண்டாக்கினான். அப்போது பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை குடையாகத் தூக்கிப் பிடித்து அங்கு வாழ்ந்த மக்களைக் காத்தார். இது நடந்ததும் ஒரு மார்கழி மாதத்தில் என்று மகாபாரதம் சொல்கிறது.

திருமாலை அடைவதற்காக ஆண்டாள் நோன்பு இருந்து திருப்பாவை அருளியது மார்கழி மாதத்தில் தான்.

அனுமன் ஜெயந்தி (டிசம்பர் 25-ந் தேதி), வைகுண்ட ஏகாதசி (ஜனவரி 6-ந் தேதி), ஆருத்ரா தரிசனம் (ஜனவரி 10-ந் தேதி), போகி பண்டிகை (ஜனவரி 14-ந் தேதி) போன்ற விழாக்கள் மார்கழி மாதத்தில் தான் கொண்டாடப் படுகின்றன.

இது போன்ற காரணங்களால், மார்கழி என்பது தேவர் களுக்கும், அவர்களது வழிபாட்டுக்கும் உரிய காலம் என்பதால், பக்தியில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள்.

மார்கழி மாதத்தின்போது அதிக சக்தி கொண்ட பிராண வாயு அடுக்கு, பூமிக்கு அருகே வரும் என்பதால், அதன் பயனைப் பெறுவதற்காக இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது, கோவில்களுக்குச் செல்வது, வீதியில் பஜனைப் பாடல் களைப் பாடிச் செல்வது ஆகியவை ஏற்படுத்தப்பட்டன என்றும் கூறப்படுவது உண்டு.

மார்கழி மாதம் குறித்து ஆன்மிக வாதிகள் தெரிவிப்பதில் இறுதியான இந்த அம்சம், அறிவியலுடன் தொடர்பு உள்ளது என்பதால், அது குறித்து அறிவியல் தரும் தகவலைப் பார்க்கலாம்.

சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்கினால், பூமியில் உள்ள சகல ஜீவராசிகளும் பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.

அந்தக் கதிர்வீச்சில் இருந்து பூமியைக் காப்பது, பூமியின் வான் மண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு என்பது 1913-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு இயற்பியல் விஞ்ஞானிகள் சார்லஸ் பாப்ரி, ஹென்றி பியூஸ்ஸன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்கள், வான் வெளியில் உள்ள பிராண வாயு மூலக் கூறுகளைத் தாக்கும்போது, பிராணவாயு (ஓ2) வில் உள்ள அணுக்கள் பிளந்து, அவற்றில் ஓர் அணு, மற்ற பிராண வாயு (ஓ2) அணுக்களுடன் இணைந்து ‘ஓ3’ என்ற கூடுதல் சக்தி கொண்ட பிராண வாயுவாக மாறுகிறது. இதுதான் ‘ஓசோன்’ எனப்படுகிறது.

வான வெளியில் சுமார் ஒரு கோடி காற்று மூலக் கூறுகளில், 3 மூலக்கூறு மட்டுமே ஓசோன் ஆக மாறுகிறது என்றும், பூமியின் வெப்ப மண்டலத்தில் உருவாகும் ஓசோன், துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். பூமியைக் காக்கும் ஓசோன் படலம், பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்து இருக்கும்.

பிராண வாயுவின் 3 அணுக்களைக் கொண்ட ஓசோன், நிறமற்றது; வாசனையற்றது. ஓசோன் அடுக்கு, பூமத்திய ரேகைப் பகுதியில் மெல்லிசானதாகவும், துருவப் பகுதியில் தடிமனாகவும் காணப்படுகிறது.

பூமியைப் பாதுகாக்கும் கவசம் போன்ற ஓசோன் அடுக்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு துளை ஏற்பட்டதால், அந்தத் துளை வழியாக வரும் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சால் பூமியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதும், ஓசோன் படலத்தில் துளை உருவாகுவதற்குக் காரணம் ‘குளோரோ புளோரோ கார்பன்’ என்ற நச்சு வாயு என்பதும் 1976-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குளோரின் அணு, ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கவல்லது என்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, 1981-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச உடன்படிக்கைப்படி (மான்ட்ரீல் புரோட்டகால்) குளோரோ புளோரோ கார்பன் வாயுவை வெளியிடும் தொழிற்சாலைகளையும், கருவிகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ந் தேதியை, ஓசோன் பாதுகாப்பு சர்வதேச தினமாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று ஐ.நா.சபை அறிவித்தது.

பொதுவாக ஓசோன் படலத்தில் ஏற்படும் துளை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாக இருக்கிறது என்பதும், டிசம்பர் இறுதியில், அதாவது மார்கழி மாதத்தில் அந்தத் துளை ஏறக்குறைய மறைந்து விடுகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

மார்கழி மாதத்தில் வரும் ஜனவரி 3 அல்லது 4-ந்தேதி அன்று சூரியன் பூமிக்கு மிக அருகே வருகிறது என்பதும், அந்தக் காலகட்டத்தில் தான் அதிக அளவு ஓசோன் உற்பத்தி ஆகிறது என்பதும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அறிவியல் அதிசயத்தை நமது முன்னோர்கள் ஏற்கனவே அறிந்து இருந்த காரணத்தால் தான் மார்கழி மாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றும் ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள்.

அமுதன்

Next Story