வியாபார அபிவிருத்தி தரும் பரிபூரணகிருபேஸ்வரர்


வியாபார அபிவிருத்தி தரும் பரிபூரணகிருபேஸ்வரர்
x
தினத்தந்தி 20 Dec 2019 8:57 AM GMT (Updated: 20 Dec 2019 8:57 AM GMT)

பாஞ்சால நாட்டில் சூரியக் குலத்தைச் சேர்ந்த மதுராந்தகன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். இவன் நல்ல நீதிமான். தானங்களை செய்பவன்.

பாஞ்சால நாட்டில் சூரியக் குலத்தைச் சேர்ந்த மதுராந்தகன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். இவன் நல்ல நீதிமான். தானங்களை செய்பவன். ஆனால் நதிதேவதைகளை மதிப்பது இல்லை. குலகுருவாகிய கன்வ மகரிஷி பாவப் புண்ணியப் பலன்களைப் பற்றியும், ஜல தானத்தின் மகிமைகளையும் அவனுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மன்னன், “தண்ணீர் தானம் செய்ய அவசியம் இல்லை” என்று கூறிவிட்டான். இறுதிவரை மற்ற அனைத்து தானங்களையும் செய்தவன், ஏரி, குளங்களை அமைக்கவில்லை.

இதனால் அடுத்தப் பிறவியில் பல்லியாக பிறந்தான். ராஜ மாளிகை ஒன்றில் பூச்சிகளை தின்று வாழ்க்கையைக் கழித்தான். ஒரு முறை அந்த மாளிகை வணிகரைக் காண, கன்வ மகரிஷி வந்தார். அவரை வணிகர் வரவேற்று பாதங்களை நீரால் கழுவினார். அப்போது சிதறிய நீர்த்துளி பல்லியின் மீதுபட்டது. உடனே அதற்கு முன்ஜென்ம நினைவு வந்தது. அது கன்வ மகரிஷியை அறிந்து கொண்டு, “மகரிஷியே, என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று மன்றாடியது.

பல்லி உருவத்தில் இருப்பது மதுராந்தகன் என்பதை புரிந்துகொண்ட கன்வ மகரிஷி, “மன்னா உனக்கு பல முறை நீரின் பெருமைகளை எடுத்துரைத்தேன். அதிக அளவு மற்ற தானங்களைச் செய்த நீ, ஜல தானம் என்னும் ஏரி, குளங்களை அமைக்கவில்லை. ஆனாலும் நீ மன்னிக்கப்பட வேண்டியவன். பல்லியான உன்னை ஒரு சந்தனப் பேழையில் வைத்து தென் திசை அனுப்புகிறேன். அங்கு தாமிரபரணி தீர்த்தத்தில் உனக்கு மனித உருவமும், ஞானமும் கிடைக்கும்” என்று கூறினார்.

அதன்படி தென்திசை வந்தப் பல்லி, அங்கும் இங்கும் அலைந்து கடைசியாகத் தாமிரபரணிக் கரையில் உள்ள முன்னீர்பள்ளத்தை அடைந்தது. அங்கு தபசிகள் கூடி தாமிரபரணிக்கு புஷ்கரணி யாகம் நடத்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட பல்லி மகிழ்ச்சியில், அங்கிருந்த ஒரு தபசியின் கமண்டல நீருக்குள் விழுந்தது. தபசி கோபத்தில் கமண்டலத்தைத் தாமிரபரணியில் வீசினார். அங்கு விழுந்த பல்லி அழகான மனிதனாக (மதுராந்தகன்) மாறியது. அதைக்கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அதன்பிறகு மதுராந்தகன், அங்கேயே பல காலம் தங்கியிருந்து தீர்த்த நீராடி சிவபெருமானை வழிபட்டான். மேலும் ஜல தானம், பானகம், மோர் போன்றவைகளைத் தானம் செய்தான்.

முன்னீர்ப்பள்ளம் கிராமம், கி.பி.1120-22 ஆண்டுகளில் ‘ஜெயசிங்க நாட்டு கீழ் களக் கூற்றம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்ரம பாண்டியன் ஆகிய இருவரும் சிற்றரசர்களாய் ஆண்ட காலத்தில் இந்தப் பகுதி சிறப்புடன் விளங்கியிருக்கிறது. பின்னர் 1544-ல் விஜயநகர மன்னன் அச்சுதராயரின் காலத்தில், ‘மூன்று நீர்ப்பள்ளம்’ என விளங்கிய இத்தலம், தற்போது ‘முன்னீர்ப்பள்ளம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவல்லப மன்னன் ஆண்ட காலத்தில், தன் சொந்த வழிபாட்டுக்கு ஒரு சிவலிங்கம் செய்து தர, ஒரு சிற்பியை நியமித்தான். சிற்பி முறையாக ஒரு சிவலிங்கத்தைச் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அடியவர் ஒருவர், தனக்கு அந்த லிங்கத்தைத் தரும்படி கேட்டார். ஆனால் “மன்னனுக்காக செய்யப்படும் சிவலிங்கம் இது. எனவே தர முடியாது” என்று சிற்பி மறுத்துவிட்டார்.

அங்கிருந்து சென்ற அடியவர், பொதிகை மலை போய்விட்டு, மீண்டும் அந்த வழியாக வந்தபோது, அதே சிற்பியிடம் சிவலிங்கத்தைத் தரும்படி மறுபடியும் கேட்டார். இப்போதும் சிற்பி மறுக்கவே, தான் கையில் வைத்திருந்த மூலிகைச் சாற்றை அந்த சிவலிங்கத்தின் மீது எறிந்தார். மூலிகைச் சாறு பட்டதும், அந்த சிவலிங்கம் தீப்பிழம்பாக எரிந்தது. பயந்து போன சிற்பி, இதுபற்றி மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னன் அந்த இடத்திற்கு வந்து, அடியவரைச் சந்தித்து விசாரித்தபோது, “சிவலிங்கம் செய்யப்பட்ட கல்லில் தேரை குடிகொண்டிருப்பதால், அது பூஜைக்குரியது அல்ல” என்றார்.

இதையடுத்து அந்த அடியவரையே சிவலிங்கம் செய்துதரும்படி மன்னன் பணித்தான். அடியவரும் அகமகிழ்ந்து, ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய முன்று நீர்நிலைகளில் உள்ள இடங்களிலும் மூன்று சிவலிங்கங்களைத் தோற்றுவித்து, மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். அப்போதுதான் அடியவராக வந்தது சிவபெருமான் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

மனம் மகிழ்ந்த மன்னன், மூன்று சிவலிங்கங்களில் ஒன்றை தன்னுடைய வழிபாட்டுக்காக வைத்துக் கொண்டான். இரண்டாவதை முன்னீர்பள்ளத்திலும், மூன்றாவதை தருவை என்ற ஸ்ரீவல்லப நகரிலும் பிரதிஷ்டை செய்தான். இரண்டு இடங்களிலும் கோவில்களை கட்டி கும்பாபிஷேகமும் செய்தான். இதையடுத்து சிவபெருமான் முன்னீர்பள்ளத்தில் ‘பரிபூரண கிருபேஸ்வர’ராகவும், தருவையில் ‘வல்லப பாண்டீஸ்வர’ராகவும் அருளாட்சி செய்யத் தொடங்கினார்.

பின்னர் கி.பி.1554-ல் விஜயநகர மன்னன் அச்சுதராயர் அனுப்பிய மல்லப்ப நாயக்கர், அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து 87 அந்தணர்களைக் குடியமர்த்தி, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலைக் கட்டி அக்ரகாரம் அமைத்து, நில மானியங்களை ஏற்படுத்தி, நீர் வசதிக்காகக் கால்வாய்களையும் அமைத்தார். சிவனையும், திருமாலையும் வழிபடும் போதுதான் வழிபாடு முழுமையடைந்து பரிபூரணக் கிருபையைப் பெறமுடியும். எனவே இவ்வூரில் சிவன் - விஷ்ணு ஆலய வழிபாடுக்கு ஏற்பாடு செய்தார். ‘சவுந்தர்ய கயிலாயம்’ என இவ்வூர் போற்றப்படுகிறது. பரிபூரண கிருபேஸ்வரர் கிழக்கு நோக்கியச் சன்னிதியிலும், பரிபூரண கிருபேஸ்வரி அம்மன் தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியிலும் அருள்பாலித்து வருகிறார்கள். இவ்விரு சன்னிதிகளுமே எழில் நிறைந்த அழகு விமானங்களுடன் விளங்குகின்றன.

சரியாக கல் தேர்வு செய்யத் தவறிய சிற்பி, சாபம் பெற்று, அம்பாள் சன்னிதியில் பல்லியாக இருந்தார். இப்போதும் அம்மன் கால் பகுதியில் தலைகீழாக இறங்கும் நிலையில் பல்லி இருப்பதைக் காணலாம். இது பார்ப்பதற்கு லிங்க ரூபம் போல் காட்சியளிக்கும். சாபம் தீர தவமிருந்த சிற்பியின் பக்திக்கு மனமிரங்கிய சிவபெருமான், நாராயணரை வழிபடச் சொன்னார். அதன்படி நாராயணரை வழிபட்டு மனித உருவம் பெற்ற சிற்பி, சிவன் அருளால் திருமாலுக்கு, மரகதக் கல்லால் அழகான சிலை ஒன்றை வடித்தார். அதன் மூலம் நாராயணரின் அருளையும் பெற்று, மீண்டும் ஸ்ரீ வல்லப மன்னரிடம் ஆஸ்தான பிரதம ஸ்தபதியாக பதவி வகித்தார் என்று தல வரலாறு சொல்கிறது.

விநாயகர் முதல் நந்தி வரை சிவ பரிவாரங்கள் புடைசூழ ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ள பகுதி ‘முன் மண்டபம்’, ‘கயிலாய மண்டபம்’ எனப் போற்றப்படுகிறது. இங்கு திருமாலின் தசாவதாரத் தோற்றத்துடன் பல பரிவாரத் தேவதைகளும் அருள் தருகிறார்கள். மல்லப்ப நாயக்கர் கட்டிய லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில்தான், சிற்பி வடிவமைத்த மரகதச்சிலை உள்ளது. சிறந்தக் கட்டிடக்கலையின் உயர்ந்த நுணுக்கங்களுடனும், ஒரு சுற்று பிரகாரம் கொண்ட இந்த ஆலயத்தில் திருமகளை மடியில் அமர்த்தியபடி இருக்கும் திருமாலின் அருள் வெள்ளம் அனைத்துப் பக்தர்களையும் அரவணைக்கிறது.

இந்த நாராயணர் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் ஒரே நாளில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அழகிய கிராமத்தில் நாராயண தீர்த்தம், அக்னி தீர்த்தம், பித்ரு தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும் உள்ளன. இரண்டு திருக்கோவில்களிலுமே ஆண்டு உற்சவங்களும், மாத உற்சவங்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. பில்லி, சூன்யம் விலகவும், தீராத நோய் தீரவும், வீடுகளில் உள்ள தோஷங்கள் நீங்கவும், குழந்தைப் பாக்கியம் பெறவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடுகள் செய்கின்றனர். வியாபார அபிவிருத்திக்காகவும், சகல ஐஸ்வர்யங்கள் பெறவும் இத்தலத்தில் பிரார்த்தனை நடைபெறுகிறது. குலதெய்வம் எதுவெனத் தெரியாத குடும்பத்தினர், அந்தக்குறை தீர இங்கு பூஜை செய்கின்றனர். இந்த கோவிலில் தம்பதி சகிதமாக காட்சிதரும் நவக்கிரகங்களை வழிபடலாம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இரட்டைப் பல்லி வழிபாட்டைப் போல, இத்தலத்தில் ஒற்றைப் பல்லி வழிபாடு பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் சித்திரையில் விஷு திருவிழா, வைகாசியில் சூரசம்காரம், ஆனி மாத அனுச நட்சத்திரத்தில் வருஷாபிேஷகம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி பூரத்தின் போது உற்சவரான மனோன்மணியம் அம்மைக்கு வளைகாப்பு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். புரட்டாசி மாதம் நவராத்திரி கொலுவில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்தருகிறாள். ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் சோமவாரம் நடத்துவார்கள். திருக்கார்த்திகையில் ஆலயத்தில் 1008 தீபம் ஏற்றப்படும். மார்கழி மாதம் திருவாதிரை, மாசிமாத சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவையும் மிகச்சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் முன்னீர் பள்ளம் உள்ளது. திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 10-வது கிலோ மீட்டரில் முன்னீர்பள்ளம் சிவன் கோவில் உள்ளது.

முத்தாலங்குறிச்சி காமராசு

Next Story