இஸ்லாம் கூறும் குடும்பத்தலைவி


இஸ்லாம் கூறும் குடும்பத்தலைவி
x
தினத்தந்தி 7 Feb 2020 9:43 AM GMT (Updated: 7 Feb 2020 9:43 AM GMT)

நமது குடும்பங்களை இறைவன் விரும்பும் இஸ்லாமியக் குடும்பங்களாக மாற்றுவதில் இல்லாளின் பங்குதான் அளப்பரியதாக இருக்கிறது.

மது குடும்பங்களை இறைவன் விரும்பும் இஸ்லாமியக் குடும்பங்களாக மாற்றுவதில் இல்லாளின் பங்குதான் அளப்பரியதாக இருக்கிறது. குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறாதவரை சமூக மாற்றம் என்பதும் சாத்தியம் அற்ற ஒரு கற்பனையாகவே தொடரும்.

ஆரோக்கியமான குடும்பமே வளமான சமூகத்தை உருவாக்கும். அந்த ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு குடும்பத் தலைவிக்கே உள்ளது.

திருக்குர்ஆன் அனைத்துத் துறைகளைக் குறித்தும் பொதுவாகவும் சுருக்கமாகவும் கூறும். ஆனால் குடும்பவியல் குறித்து மட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசுவதைக் கவனித்திருக்கலாம். குடும்பவியலுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

நல்ல குடும்பம் என்பது அமைதியையும் மகிழ்ச்சியையும் அடித்தளமாகக் கொண்டே அமைக்கப் படுகிறது. குடும்பங்களில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட வேண்டுமெனில் தலைவனும்- தலைவியும், கணவனும்-மனைவியும் பரஸ்பரம் தமக்கிடையே நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

திருமணத்திற்குப் பின்னர் ஒரு பெண் ‘இல்லாள்’ என்ற உயர் பதவியை அடைகின்றாள். இல்லாள்... இல்லத்தை ஆள்பவள். இல்லத்தரசி என்றும் பெருமிதமாகவும் குறிப்பிடலாம். இல்லத்தை ஆள்வதில் தலைவனை விட தலைவிக்கே அதிக பொறுப்பு உள்ளது.

கணவனும் மனைவியும் குடும்பத்தின் பங்காளிகள்தானே தவிர, மனைவி அடிமையுமல்ல, கணவன் எஜமானருமல்ல. ஆகவேதான் இல்லற வாழ்வில் இணையும் இருவரையும் ‘வாழ்க்கைத் துணை’ என்று அழைக்கிறோம்.

சிறந்த சந்ததிகளை உருவாக்குவதுதான் குடும்ப வாழ்வின் இலக்கு. இன்பகரமான குடும்பப் பின்னணியின் மூலம்தான் தூய சந்ததிகளை உருவாக்க முடியும். அந்த இன்பகரமான குடும்பப் பின்னணியைத் தோற்றுவிப்பதில் குடும்பத்தலைவியின் பொறுப்பு பெரும் பங்காக இருக்க வேண்டும் என்பதை குடும்பத் தலைவிகள் மறக்கலாகாது.

முன்மாதிரி தாய்

பிள்ளைகளை வார்த்தெடுக்கும் விஷயத்தில் குடும்பத்தலைவி முன்மாதிரி தாயாகத் திகழ வேண்டும். வரலாற்றில் சாதனை படைத்த ஆளுமைகளுள் பெரும்பாலானோர் சிறு பருவத்திலேயே தாய்மார்களால் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். தாய்மார்களால் தனிக்கவனம் செலுத்தப்பட்ட பிள்ளைகளே பிற்காலத்தில் பெரும் ஆளுமை மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர்.

அன்றைய தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு ஊட்டும் அமுதுடன் அறிவையும் ஒழுக்கப் பண்பாடுகளையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர். அதுதான் பிற்காலத்தில் அவர்களது ஊட்டச்சத்தாக அமைந்துள்ளது.

அலி (ரலி) அவர்களை, “அறிவின் தலைவாசல்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறினார்கள். இதற்கான மூலகாரணம், அவரின் தாய் பாத்திமா பின்த் அசத் (ரலி) அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல.

ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவும் ஞானமும் நற்பண்புகளும் மிக்கவராகவும் பெரும் வீரராகவும் திகழ்ந்தார்கள்.

“ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஒரு மெய்க்காப்பாளர் இருப்பார். எனது மெய்க்காப்பாளர் ஸுபைர் (ரலி)” என்று பெருமானார் (ஸல்) அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். பெரும் போர் வீரர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள்கள் பிடித்து போர் செய்யும் ஆற்றல் பெற்ற தனிப்பெரும் வீரர்.

இவ்வளவு சிறப்புக்கும் காரணம் யார்? அவரின் தாயார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள்தான். இதனை வரலாறு தெளிவுற பதிவுசெய்து வைத்துள்ளது.

‘இரண்டாம் உமர்’ என்றும் ‘நேர்வழி நின்ற ஐந்தாம் கலீபா’ என்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெருமையுடன் பாராட்டப்படுபவர்தான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள். இவரது தாயார், உமர் (ரலி) அவர்களுடைய மகனான ஆஸிம் (ரலி) அவர்களுடைய மனைவியாகும். இப்பெண்மணி நற்குணத்திலும் இறையச்சத்திலும் இறை வழிபாட்டிலும் மிகச்சிறந்தவராக விளங்கினார். ஆகவே தமது மகனை ஒரு தலைசிறந்த ஆளுமை மிக்க முன்மாதிரியாக மாற்றிக்காட்ட நாடினார். முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார்.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியுமா என்ன? சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆயினும் அன்னாரின் தாயார் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களைப் பேணி வளர்த்து, அமுதோடு அறிவையும் சேர்த்து ஊட்டி உலகம் போற்றும் உத்தம அறிஞராக மாற்றிக்காட்டினார். அனைத்துப் பெருமையும் அன்னாரின் தாயாரையேச் சாரும்.

இமாம் அவர்களின் அன்னை கூறுகின்றார்: “நான் எனது மகன் ஷாபிக்கு எப்பொழுதெல்லாம் பாலூட்ட நினைப்பேனோ அப்போதெல்லாம் உளு (அங்க சுத்தி) செய்துகொள்வேன்”. தமது பிள்ளையை பெரிய ஆளாக வளர்த்தெடுக்க ஒரு தாய் எப்போது எப்படி திட்டம் போட்டுள்ளார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

பொதுவாக தந்தையைவிட தாய்தான் பிள்ளை களுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுவார். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவார். இதன் காரணமாகத்தான் தாய்-சேய் உறவு பலமடைகிறது.

தாயின் மடியே பிள்ளைகளின் முதல் பள்ளிக்கூடமாகத் திகழ்கிறது. அங்கு கற்பிக்கப்படும் பாடங்களும், கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்களும்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன, சிறந்த ஆளுமைகளாக அவர்களை உருவாக்குகின்றன என்பதை குடும்பத் தலைவிகள் மறந்துவிடலாகாது.

ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுத்து அன்னையால் வார்த் தெடுக்கப்படும் பிள்ளைக்கும், தாயால் வளர்க்கப் படாத பிள்ளைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அழகுறப் புரிந்துகொள்ளலாம். தாய் சரியில்லை என்றால் ஏறக்குறைய பிள்ளையும் சரியில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மலை உச்சி மீது ஏறி நின்ற தமது மகனை நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கின்றார்கள். அவனோ கப்பலில் ஏற மறுகின்றான். இக்காட்சியை திருக்குர்ஆன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது:

“அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே”. அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” (11:42)

இறுதியில் என்னவாயிற்று..? அதையும் திருக்குர்ஆனே விவரிக்கின்றது: “இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்!” (11:43)

வாழ வருமாறு தந்தை அழைக்கின்றார். மகன் மறுக்கின்றான். தந்தையின் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து தண்ணீரில் மூழ்கிப்போன ஒரு மகனின் பரிதாபக் கதை இது.

காரணம் யார்? நூஹ் (அலை) அவர்களின் மனைவி. அதாவது மகனின் தாயார். அவர் முஸ்லிமாக இருக்கவும் இல்லை, ஒழுக்கப்பண்புகளை மகனுக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை.

அதே சமயம் இன்னொரு தந்தையும் தனது மகனை அழைத்தார். அவர் யார் தெரியுமா? ஆம். அவர்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். அறுத்துப்பலியிட மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைக் கிறார் தந்தையாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள். மகனின் பதில் என்னவாக இருந்தது? திருக்குர்ஆன் அழகாக இதனை எடுத்தியம்புகிறது:

“என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவுகண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்” (37:102)

தந்தை மரணத்தை நோக்கி அழைக்கின்றார். ஆயினும் மகனின் பதிலைப் பாருங்கள். இப்படியொரு வியத்தகு பதிலைக் கூறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார்? இப்ராஹீம் (அலை) அவர் களுடைய மனைவி, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய தாயார் அன்னை ஹாஜிரா அம்மையார் அவர்கள்தானே. காரணம், அந்த அம்மையாரின் தனிப்பெரும் வளர்ப்பு அப்படி இருந்தது.

ஒரு தந்தை தனது மகனை வாழ்வதற்காக அழைக்கின்றார். மகன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கின்றான், நிராகரிக்கின்றான். அதேசமயம் இன்னொரு தந்தையோ தமது மகனை அறுத்துப் பலியிட மரணத்தை நோக்கி அழைக்கின்றார். மகனோ உடனடியாக அந்த அழைப்புக்குச் செவி சாய்கின்றார்.

இரு மகன்களுக்கும் இடையே நிலவும் இந்த வேறுபாடு உணர்த்துவது என்ன? தாயின் வளர்ப்பு மிகச்சரியாக அமைந்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இதுவே இல்லற வாழ்வில் இல்லாளின் கடமை!

ஆகவே, நாமும் நமது குடும்பமும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தந்தையின் பங்களிப்பைவிட தாயின் பங்களிப்பே அதிகம் தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே போதும், அநேக குடும்பங்கள் சுவனக்குடும்பங்களாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story