ஆன்மீகம்: திருமண அழைப்பும்.. விருந்தும்..


ஆன்மீகம்: திருமண அழைப்பும்.. விருந்தும்..
x
தினத்தந்தி 24 Aug 2021 7:55 AM GMT (Updated: 24 Aug 2021 7:55 AM GMT)

இயேசு எருசலேம் கோவிலில் பரி சேயரையும், மறைநூல் அறிஞர்களையும், குருக்களையும், மக்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது, “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.

மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள் என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார். வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்று தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில்கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலரே’’ என்று உவமையை முடித்தார்.

இந்த உவமையை படிக்கும் நாமும் திருமண ஆடை எது என்று அறியாமல் திகைப்படைகிறோம். ஆனால், நம் அனைவருக்கும் திருமண ஆடையை அளிப்பதற்காகவே, இயேசு, விண்ணிலிருந்து உலகுக்கு வந்தார். அது அவருடைய அன்பின் புதிய உடன்படிக்கை.

நம் பழைய வாழ்வுக்குப் பாவ மன்னிப்பும், புது வாழ்வுக்குத் தூய ஆவியும் இயேசுவால் இலவசமாக வழங்கப்படுகின்ற திருமண ஆடையாகும். இயேசு அளித்த திருமண ஆடையை அக்காலத்திலிருந்த குருக்களும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயரும், யூதர்களும் அறியவோ, அணியவோ விரும்பவில்லை. எனவே அவர்களிடமிருந்து இறையாட்சி நீக்கப்பட்டது. அவர்களைப் போலவே, இப்போது திருச்சபையில் மீட்பு பெற்றவர் என்று எண்ணும் நம்மில் பலரும் அறியாமலும் அணியாமலும் இருக்கிறோம். நாம் அழைப்பு பெற்றவர்களாக இருந்தாலும், தெரிந்துகொள்ளப்பட்ட சிலராக இருக்கிறோமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

திருத்தூதர் பவுல் நம்மைக் குறித்து, “இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது. இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டே இருந்தாலும் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள்”, என்று கூறுகிறார். மேலும், அவர் பரிசேயரையும் நம்மையும் ஒப்பிட்டுக் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். “இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா? இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்”.

Next Story