வறுமையை விலக்கும் அன்னாபிஷேகம்


வறுமையை விலக்கும் அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 20 Oct 2021 12:46 AM GMT (Updated: 20 Oct 2021 12:46 AM GMT)

ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினம் அன்று, சிவாலயம் தோறும் அன்னாபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெறும். இந்த அன்னாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு, இறைவனை வழிபடுபவா்களுக்கு வாழ்வில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.

27 நட்சத்திரங்களின் தந்தையாக இருப்பவா் தட்சன். அவா் தன்னுடைய 27 பெண்களையும், அழகு நிறைந்த சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அவா்கள் அனைவரிடமும் சரிசமமான அன்பு செலுத்துவதில் இருந்து சந்திரன் தவறிப் போனான். அவனுக்கு ரோகிணியின் மீதே அதிக அன்பு இருந்தது. இதனால் மனம் வருந்திய மற்ற பெண்கள், தனது தந்தையிடம் இதுபற்றி தெரிவித்தனா். இதையடுத்து சந்திரனுக்கு சாபம் அளித்தார், தட்சன். இதனால் சந்திரன் ஒவ்வொரு நாளும் தேய்ந்து, அழகு குறைந்தவனாக மாறினான்.

இந்த சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும். சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதாக சொல்லப்படுகிறது.

சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

பலர் செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

அன்னம் என்பதற்கு ‘உட்கொள்வது', ‘உட்கொள்ளப்படுவது' என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.

அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்று வேதங்கள் கற்பிக்கின்றன.

அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

Next Story