திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்..


திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்..
x
தினத்தந்தி 18 Nov 2021 9:34 AM GMT (Updated: 18 Nov 2021 9:34 AM GMT)

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலையும், நான்குபுறமும் உள்ள 9 கோபுரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரமாண்ட ஆலயமாகும். இங்கு நான்குபுறமும் பெரிய கோபுரங்கள் மற்றும் உள்கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவாசல்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் திருவண்ணாமலையை ‘நவதுவார பதி’ என்றும் சொல்வார்கள். இந்த கோபுரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

3. திருமஞ்சன கோபுரம்
1. ராஜகோபுரம் (கிழக்கு)
2. பேய்க்கோபுரம்
9. வடக்கு கட்டை கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு பகுதியில் உள்ள பெரிய கோபுரம் இது. 157 அடி உயரத்தில் அமைந்த இந்த ஆலயத்தை கட்டியவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதும் தெரியவில்லை. இது ஒரு சிறப்புக்குரிய நுழைவு வாசல் ஆகும். ஏனெனில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரண்டு விழாக்களின் போதும், இந்த கோபுரத்தின் வழியாகத்தான், நடராஜர் வெளியே வந்து திருவீதி உலா செல்வார். திருவீதி உலா முடிந்தும், கோவிலுக்குள் செல்வதும் இந்த வழியாகத்தான். முன் காலத்தில் இறைவனுக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, இந்த வாசல் வழியாகத்தான் யானை மீது வைத்து உள்ளே எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே இந்த வாசல் கோபுரத்திற்கு ‘திருமஞ்சன கோபுரம்’ என்று பெயர் வந்ததாம்.

4. அம்மணி அம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்த பெரிய கோபுரம் இது. திருவண்ணாமலை பகுதியில் வாழ்ந்த ஒரு பெண் சித்தரின் முயற்சியால் கட்டப்பட்டதாகும். சிவபெருமானே இவரது கனவில் வந்து, வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டும்படி உத்தரவிட்டார். இதனால் பலரிடம் நன்கொடை பெற்று இந்தப் பணியை அம்மணி அம்மாள் செய்து வந்தார். 5 நிலைகள் கட்டப்பட்ட நிலையில் பணம் தேவைப்பட்டது. அப்போது சிவபெருமானே, பணம் கிடைக்க அருளினார். மீண்டும் சித்தரின் கனவில் வந்து, ‘பணியாட்களுக்கு விபூதியை ஊதியமாகக் கொடு, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். அதன்படியே கட்டிட வேலையைத் தொடங்கிய அம்மணி அம்மாள், அதில் பணியாற்றியவர்களுக்கு, ஊதியமாக விபூதியை வழங்கினார். விபூதியை பெற்றவர்கள் வீட்டிற்குச் சென்று பிரித்து பார்த்தபோது, அன்று அவர்கள் வேலை பார்த்ததற்கான ஊதியத் தொகை சரியாக இருந்தது. இப்படி முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட இந்த வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும். கிழக்கு பிரதான ராஜகோபுரத்தைப் போலவே 11 நிலைகளுடன், 13 கலங்களுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இது. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் நிறைவேறிய காரணத்தால், இந்த கோபுரத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

5. வல்லாள மகாராஜா கோபுரம்

1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இதனை கட்டியவர், வீர வல்லாள மகாராஜா. கிழக்கு ராஜகோபுரத்தைத் தாண்டியதும் வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். இந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. இதனால் வருந்திய மன்னனின் கனவில் வந்த சிவபெருமான், தானே மகனாக இருந்து அனைத்து காரியங்களையும் செய்வதாக வாக்களித்தார். அதன்படியே, வல்லாள மகாராஜா இறந்த வேளையில், அவருக்கு சிவபெருமானே இறுதிச் சடங்கை செய்ததாக ஐதீகம். இன்றும் மாசி மாதம் நடைபெறும் நிகழ்வில், மன்னனுக்கு ஈசன் திதி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுதான். இந்த கோபுரம் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர், கிருஷ்ணதேவராயர். ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை, 216 அடியாக நிர்மாணித்தார். அதை விட ஒரு அடியாவது பெரியதாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார், கிருஷ்ண தேவராயர். இதற்கான பணியை 1550-களில் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, கிருஷ்ணதேவராயர் இறந்துவிட்டார். இதையடுத்து சில ஆன்மிகப் பெரியவர்கள், தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம், இந்தப் பணியை முடிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை, கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட, ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடியுடன் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம், தமிழ்நாட்டில் 2-வது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.

6. கிளி கோபுரம்

திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இதனை 1053-ம் ஆண்டு, ராஜேந்திரச் சோழன் கட்டியுள்ளார். சுமார் 81 அடி உயரம் கொண்டது இந்த கோபுரம். வல்லாள மகாராஜா கோபுரத்திற்கு அடுத்தபடியாக இருக்கிறது. முருகப்பெருமானின் புகழைப்பாடிய அருணகிரிநாதா் பிறந்த திருத்தலம் இது. இவர் ஆரம்ப காலத்தில் பெண் பித்தராக இருந்தார். ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்த அவர், இந்த கோபுரத்தின் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய துணிந்தார். அப்போது முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க தேவலோகத்தில் உள்ள மலர் தேவை என்றும், அதனைக்கொண்டு வர அருணகிரிநாதரால்தான் முடியும் என்றும், மன்னனின் ஆலோசகராக இருந்த சம்பந்தாண்டான் கூறினான். இதனை நம்பி, கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால், தன்னுடைய ஆன்மாவை, இறந்து போன ஒரு கிளியின் உடலுக்குள் செலுத்திக்கொண்டு, தேவலோகம் சென்றார், அருண கிரியார். அதற்குள் அருணகிரியார் மீது பொறாமை கொண்டிருந்த சம்பந்தாண்டான், அவரது உடலை எரித்துவிட்டான். இதனால் கிளி உருவத்திலேயே அந்த கோபுரத்தில் தங்கினார் அருணகிரியார். இதனால் இது ‘கிளி கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இது கிழக்கு ராஜகோபுரத்தின் நேராக மேற்கு பகுதியில் உள்ளது. இதனை ‘பேய்க்கோபுரம்’ என்று அழைக்கிறார்கள். கிழக்கு ராஜகோபுரத்திற்கான பணியை தொடங்கியபோதே, மேற்கு கோபுரத்திற்கான பணியையும் கிருஷ்ண தேவராயர் தான் தொடங்கினார். ஆனால் இதனை கட்டி முடித்ததும், தஞ்சை செவ்வப்ப நாயக்கர்தான். 160 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம், தொடக்க காலத்தில் ‘மேற்கு கோபுரம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அது பேச்சு வழக்கில் ‘மேக்கோபுரம்’ என்றாகி, பிறகு மருவி ‘பேக்கோபுரம்’ என்றாகிப்போனது. பேக்கோபுரம் என்று பேசிப் பேசியே, இது ‘பேய்க்கோபுரம்’ என்ற பெயரைப் பெற்றுவிட்டது. 9 நிலை கொண்ட இந்த கோபுரத்திலும் ஏராளமான சிற்பங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. கார்த்திகைத் தீபத் திருநாளின் போது மட்டும்தான் இந்த கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் மூடப் பட்டு இருக்கும்.

7. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் ‘தெற்கு கட்டை கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

8. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தபடியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

Next Story
  • chat