கிறிஸ்து பிறப்பும், புதுவருட பிறப்பும் உணர்த்தும் நற்செய்தி


கிறிஸ்து பிறப்பும், புதுவருட பிறப்பும் உணர்த்தும் நற்செய்தி
x
தினத்தந்தி 9 Jan 2022 5:37 AM GMT (Updated: 9 Jan 2022 5:37 AM GMT)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னி மரியாளின் மகனாய் இயேசு பிறந்தார். இவர் கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார் என்பதே நம்பிக்கையின் செய்தி.

‘இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது, தந்தையின் அன்பு’ என யோவான் கூறியதும் (யோவான்3:16), ‘இயேசு என்ற பெயருக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளிப்பவர். அதாவது ரட்சகர்’ என மத்தேயு (1:21) கூறியதும் பாவங்களிலிருந்து இவ்வுலகை மீட்க இயேசு பிறந்தார் என்பதையும் அறிய முடிகிறது.

இயேசு கிறிஸ்து உலக ரட்சகர் என்ற நிலையில் அவர் அரண்மனையில் அலங்காரமாக, ஆடம்பரமாகப் பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில், ஏழ்மையின் கோலமாகத் தாழ்மையின் வடிவாகப் பிறந்தார். (பிலிப்பியர் 2:4-8).

‘இயேசு பிறந்தார்’ என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. இயேசுவின் தாழ்மை இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்விலிருந்து மாற்றம் பெற்று, ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அழைப்பு விடுக்கிறது. அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக, அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் பண்டிகை நமக்கு வலியுறுத்தும் கருத்து.

அதேபோல பெத்லகேமில் குழந்தையாகப் பிறந்த இயேசு பெத்லகேமிலேயே குழந்தையாகவே இருந்து விடவில்லை. இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார்.

‘பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது’ என்று இயேசுவின் ஆவிக்குரிய வல்லமையை விவிலியம் பேசுகிறது.

‘அவர் நகரங்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்’ என இயேசு அநேகருடைய குறை வாழ்வை நிறை வாழ்வாக்கியதை விவிலியம் பேசுகிறது.

அதன் உச்சகட்டமாக, மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கல்லறையிலேயே இருந்து விடவில்லை. உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த உலக ரட்சகர் மண்ணுலகிலேயே இருந்துவிடவில்லை. நமக்காய் பரிந்து பேச, விண்ணுலகம் சென்றார். அவர் அங்கேயும் நிலையாய் இருந்துவிடப் போவதில்லை.

அவர் மறுபடியும் மண்ணுலகம் வந்து நம்மை அவரோடு இருக்கும்படி நம்மைப் பரம வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

‘தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்த பின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்’ (யோவான் 14:3) என அதை விவிலியமும் உறுதிப்படுத்துகிறது.

இப்படி ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முதல் அவரது இரண்டாம் வருகை வரை மனித வாழ்வின் மாற்றத்தை மையப்படுத்தியே அமைகிறது. அப்படி கிறிஸ்து பிறப்பு உணர்த்தும் மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்திருக்கிறோமா...? என்பதை புதுவருட பிறப்பில் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். நம்மை மாற்றிக்கொள்ளவும், இறை ஆட்சி தகுதியான மனிதர்களாய் வாழவும், புதுவருடம் நமக்கு அழைப்பு விடுகிறது. அதை ஏற்று வாழ்வோம். கிறிஸ்து பிறப்பையும், புதுவருட பிறப்பையும் அர்த்தமுள்ளதாய் கொண்டாடுவோம்.

-ஆர்.ஆண்டனி ராஜ், சென்னை.

Next Story