மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை என்னவாகும்?


மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை என்னவாகும்?
x
தினத்தந்தி 10 Feb 2017 9:30 PM GMT (Updated: 10 Feb 2017 3:56 PM GMT)

தமிழ்நாட்டில் 2006–ம் ஆண்டுக்கு முன்புவரை மருத்துவக்கல்லூரிகளிலும், பல் மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலமாக நடைபெற்றுவந்தது.

மிழ்நாட்டில் 2006–ம் ஆண்டுக்கு முன்புவரை மருத்துவக்கல்லூரிகளிலும், பல் மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு மூலமாக நடைபெற்றுவந்தது. 2006–ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த ஒரு சட்டத்தின் காரணமாக, நுழைவுத்தேர்வுமுறை ரத்து செய்யப்பட்டது. பிளஸ்–2 இறுதித்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரிகளுக்கும், பல் மருத்துவக்கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. ஏற்கனவே இந்திய மருத்துவக்கவுன்சில் மற்றும் பல் மருத்துவர்கள் சட்டம் அடிப்படையில், இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு (நீட்) என்று அழைக்கப்படும் நுழைவுத்தேர்வு தேசிய அளவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் ‘நீட்’ தேர்வு மூலமாகவே மருத்துவக்கல்லூரிகளுக்கும் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், தமிழக கல்வித்திட்டத்தின் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு பிளஸ்–2 வரை கல்வி புகட்டப்பட்டு வருகிறது. ஆனால், ‘நீட்’ தேர்வில் மத்திய கல்வித்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் கேட்கப்படும். தமிழக பாடத்திட்டம் வேறு, மத்திய கல்வி பாடத்திட்டம் வேறு. சமமான கற்றல் வாய்ப்பு இல்லாதபோது சமமான போட்டி எப்படி சாத்தியமாகும்?. கிராமப்புற மாணவர்களால் நிச்சயம் முடியாது. எனவே, ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடந்தால், மத்திய கல்வித் திட்டங்களின் அடிப்படையில் படித்த மாணவர்கள் மற்றும் பிறமாநில மாணவர்கள் அதிகளவில் தேர்வுபெற்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் பெரும்பான்மையான இடங்களை பெற்று விடுவார்கள். இந்தநிலையில், தமிழக அரசு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டில் ‘நீட்’ தேர்வு இல்லாமல், தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்திவரும் பிளஸ்–2 இறுதித்தேர்வின் மார்க்குகளின் அடிப்படையில்தான் நடைபெறவேண்டும் என்று தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு மே மாதம் 7–ந்தேதி நடைபெறும் என்றும், இதற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்ய ஜனவரி 31–ந்தேதி முதல் மார்ச் 1–ந்தேதிவரை காலஅவகாசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சட்டத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தால்தான், அது சட்டமாகி அமலுக்கு வரமுடியும். ஏனெனில், மருத்துவக்கல்லூரி என்பது மாநிலஅரசு பட்டியலில் மட்டும் இல்லை. பொதுவாக மத்திய–மாநில அரசுகளுக்கான பொதுபட்டியலில் இருக்கிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மத்திய சுகாதார அமைச்சகம், சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைக்குப்பிறகுதான் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பமுடியும். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சற்று மாறுதலான வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், மீண்டும் உச்சநீதிமன்றம் இந்த மசோதா வி‌ஷயத்தில் என்னநிலை எடுக்கும் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. மார்ச் 1–ந்தேதி வரைதான் தமிழக மாணவர்கள் ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், மார்ச் 1–ந்தேதிக்குள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கான ஒப்புதல் கிடைத்து விடுமா?, எங்கள் நிலை என்னவாகும்? என்பதுதான் தமிழக மாணவர்களின் கவலையாக இருக்கிறது. தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்காமல் போய்விட்டால், ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் மட்டுமே மாணவர் சேர்க்கையில் இடம் பெறுவர். மற்றவர்களின்நிலை கஷ்டம்தான் என்ற நிலையிலேயே தமிழக அரசு உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெறவேண்டும். இல்லையென்றால், யதார்த்த நிலையில் இதுதொடர்பான அறிவுரைகளை மாணவர்களுக்கு தெரிவிக்கும்வகையில், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிவிடவேண்டும். மாணவ செல்வங்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது. அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Next Story