சர்க்கரை நோய் மாணவர்களுக்கு சாக்லெட்


சர்க்கரை நோய் மாணவர்களுக்கு சாக்லெட்
x
தினத்தந்தி 3 March 2017 8:30 PM GMT (Updated: 3 March 2017 2:16 PM GMT)

மத்திய செகண்டரி கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ.) மாணவர்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவ்வப்போது சில உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது.

த்திய செகண்டரி கல்விவாரியம் (சி.பி.எஸ்.இ.)  மாணவர்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவ்வப்போது சில உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த உத்தரவுகள் எல்லாம் வெறும் ஏட்டளவில் இல்லாமல், நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை உயர் அதி காரிகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்த வகையில், தற்போது இரண்டு உத்தரவுகளை பிறப்பித் திருக்கிறது. இன்றையகாலக்கட்டத்தில், இளம் மாணவர்கள் ஏராளமானோருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. நிறையமாணவர்கள் அதற்குரிய மருந்து களை சாப்பிட்டுக் கொண்டு வருகிறார்கள். தற்போது 10, 12–ம் வகுப்பு பொதுதேர்வுகள் நடக்கப்போகும் நிலை யில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தேர்வு எழுதும் அறைக்கு ஏதாவது சாப்பிடு வதற்கு பிஸ்கட், சாக்லெட், மிட்டாய், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சான்ட்விச் போன்ற பொருட்கள் மற்றும் ½ லிட்டர் தண்ணீர் பாட்டில் கொண்டுபோகலாம். அவற்றை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு, தங்களுக்கு சர்க்கரை அளவு எப்போது குறைகிறது என்று நினைக்கிறார் களோ, அப்போது கேட்டு வாங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவுகளை தமிழக கல்வித்துறையும் பிறப்பிக்கலாம்.

இதுபோல, மாணவர்களை வீடுகளிலிருந்து பள்ளிக் கூடங்களுக்கு ஏற்றிவரும் பஸ்கள், ‘மஞ்சள் வர்ணம்’ பூசியிருக்கவேண்டும். பஸ்சின் இருபுறமும் ‘பள்ளியின் பெயர்’ பெரிய அளவில் எழுதப்பட்டிருக்கவேண்டும். வாடகை பஸ்களாக இருந்தால், ‘பள்ளிக்கூட பணி’ என்று எழுதப்பட்டிருக்கவேண்டும். ஜி.பி.எஸ். கருவி, கண்காணிப்பு கேமரா ஆகியவை கண்டிப்பாக பொருத்தப் பட்டிருக்கவேண்டும். 40 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லாத அளவு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப் பட்டிருக்கவேண்டும், பஸ் டிரைவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது செல்போனில் பேசுவதோ, பஸ்சில் இருக்கும் யாருடனும் பேசவோ கண்டிப்பாகக்கூடாது என்பது உள்பட பல கட்டுப்பாடுகள் கொண்ட விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங் களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், தமிழக அரசு கல்வித்திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களிலும் இதுபோன்ற விதிகள் முழுமையாக செயல்படுத்தப் படவேண்டும். தமிழக அரசும் கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30–ந்தேதி மாணவர்களின் பாதுகாப் புக்காக இதுபோல ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன்படி, பஸ்களை ஓட்டும் டிரைவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்கவேண்டும். விதிமுறை மீறியதாக ஆண்டுக்கு 2 முறைக்குமேல் போக்கு வரத்து போலீசாரால் பிடிக்கப்பட்டிருக்கக்கூடாது. பணியில் இருக்கும்போது காக்கி பேண்ட், சட்டை அணிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் பெயர் பொறிக்கப்பட்ட ‘பேட்ஜ்’ அணிந்திருக்கவேண்டும். குறிப் பிட்ட வேகத்துக்குமேல் ஓட்டக்கூடாது. பஸ்கள் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு, பள்ளி பேருந்து என்று இருபக்கமும் எழுதப்பட்டிருக்கவேண்டும். பள்ளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவை வெளிப் புறத்திலும் எழுதியிருக்கவேண்டும்.

ஜன்னல் குறுக்கு வாட்டமாக கம்பி அமைக்கப் பட்டிருக்கவேண்டும். அவசரவழி ஒன்று இருக்கவேண்டும். முதல் உதவிபெட்டி இருக்கவேண்டும். கண்டிப்பாக தீயணைக்கும் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுபோன்ற பல கட்டுப்பாடுகள் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏட்டளவில் தான் இந்த உத்தரவு இருக்கிறதேதவிர, பெரும்பாலான பள்ளிபேருந்துகளில் இவை கடைப்பிடிக்கப்படுவதாக தெரியவில்லை. எனவே, தமிழக அரசின் போக்குவரத்துத் துறை, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு விதித்துள்ள உத்தரவுக்கு முன்னோடியாக 2012–லேயே கொண்டுவரப் பட்ட தமிழக அரசு சட்டத்திலுள்ள பிரிவுகளோடு அதில் இல்லாததை, சி.பி.எஸ்.இ. விதிகளில் ஏதாவது நடை முறைப்படுத்தவேண்டிய அம்சங்கள் இருந்தால் அதையும் சேர்த்து தீவிரமாக அமல்படுத்தி, அவ்வப்போது கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யவேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இளம் பிஞ்சுகளாம் மாணவ–மாணவிகளை  ஏற்றிச்செல்லும்  பள்ளிக்கூட பஸ்கள்  எப்போதும் பாதுகாப்பாகவே வலம்வர வேண்டும். 

Next Story