தமிழ்நாட்டில் நிறைய தடுப்பணைகள்; கால்வாய்கள்


தமிழ்நாட்டில்  நிறைய  தடுப்பணைகள்;  கால்வாய்கள்
x
தினத்தந்தி 20 Sep 2017 9:30 PM GMT (Updated: 20 Sep 2017 12:59 PM GMT)

குஜராத் மாநில மக்கள் நரேந்திரமோடி போன்ற தலைவர்கள் இருப்பதால், உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

குஜராத் மாநில மக்கள் நரேந்திரமோடி போன்ற தலைவர்கள் இருப்பதால், உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள் என்றுதான் கூறவேண்டும். நரேந்திரமோடி முதல்–மந்திரியாக இருந்தபோது, அந்த மாநிலத்திற்கு பல திட்டங்கள் வந்தன. பிரதமரான பிறகும், அவருக்கு தன் சொந்த மாநிலத்தின் மீது பாசம் அதிகரித்துத்தான் வருகிறது. ஏற்கனவே சீன அதிபர் வந்தநேரத்திலும் குஜராத்திற்கு அழைத்து சென்றார். சமீபத்தில் ஜப்பான் பிரதமரையும் அழைத்துவந்தார். அவர்களைத்தொடர்ந்து பல திட்டங்கள் வர இருக்கிறது. இப்போது அவர் தனது பிறந்தநாளன்று நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகிலேயே 2–வது பெரிய அணையான ‘சர்தார் சரோவர்’ அணையை திறந்துவைத்து, ‘எங்கள் மாநிலத்திற்கு பசுமை புரட்சியை கொண்டுவாருங்கள்’ என்று சொல்லும்வகையில் மலர்களை தூவினார். உலகிலேயே மிகப்பெரிய அணை அமெரிக்காவில் உள்ள ‘கிராண்ட் கவுலி’ அணையாகும். அதற்கு அடுத்தளவில் மிகப்பெரிய அணையான இந்த சர்தார் சரோவர் அணையைப்பற்றிய கருத்துரு 1946–ல் சர்தார் வல்லபாய் படேலால் உருவாக்கப்பட்டது.

1961–ம் ஆண்டு இந்த அணைக்கு பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் இந்த அணைக்கட்டுவதால் இடம் பெயரவேண்டிய கிராம மக்கள் தொடர்பாக பல்வேறு தாவாக்கள் எழுந்ததால், இதன் கட்டுமானப்பணிகள் 1980–ல் தான் தொடங்கியது. அதன்பிறகும், பல்வேறு தடைகள் இதற்கு இருந்தன. இப்போது இந்த அணை கட்டப்பட்டுவிட்டது. இந்த அணை 88 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். ரூ.40 ஆயிரம் கோடி செலவிலான இந்த அணை 56 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குஜராத் மாநிலத்தின் 15 மாவட்டங்களிலுள்ள 73 தாலுக்காக்களில் இருக்கும் 3,112 கிராமங்களிலுள்ள 18 லட்சத்து 54 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறும். இதுமட்டுமல்லாமல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவன பகுதியான பார்மர், ஜலோர் ஆகிய இருமாவட்டங்களிலுள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களும் வளமை பெறும். இதுதவிர, 2 புனல் மின்சார திட்டங்களுக்கும் கதவுகளை திறந்து வைத்திருக்கிறது.

அடுத்த 3 மாதங்களுக்குள் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. 182 இடங்களில், 150 இடங்களை பெற்றேத்தீருவோம் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றுகிறது. தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து, இதுபோல மாநிலத்திற்கும், அங்குள்ள மக்களுக்கும் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றிவிட்டு, அதை சொல்லி ஓட்டுக்கேட்பதுதான் சாலச்சிறந்ததாகும். ஆளுங்கட்சியின் தரப்பில் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்வதும், எதிர்க்கட்சி தரப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைவிட அதிகமாக என்னென்ன திட்டங்களை செய்வோம் என்று சொல்வதுமே நல்ல ஜனநாயக முறையாகும். தமிழ்நாட்டில் இதுபோன்ற பெரிய அணையை நமது ஆறுகளின் குறுக்கே கட்டசாத்தியமில்லை. ஆனால், மோடியை பின்பற்றி இதற்கு முன்பிருந்த முதல்–அமைச்சர்கள், அமைச்சர்கள், அரசுகள் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த நினைத்தார்களோ?, அடிக்கல் நாட்டியிருந்தார்களோ?, அறிவித்திருந்தார்களோ?, அந்தத்திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்படாமல் போய்விடுவதைவிட, அதை பட்டியலிட்டு சாத்தியக்கூறுகள் உள்ள அனைத்து திட்டங்களையும் அரசியல் பார்க்காமல் நிறைவேற்றவேண்டும். அனைத்து ஆறுகளிலும் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்படவேண்டும். கிளைஆறுகள், கால்வாய்களை வெட்டி, மழைக்காலத்தில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஒரு சொட்டுகூட கடலில் போய் வீணாக கலக்காத ஒருநிலையை ஏற்படுத்தும் வகையில், நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றவேண்டும். மத்திய அரசாங்கமும் கைகொடுக்கவேண்டும். நிதி ஆயோக் ஆலோசகர் டாக்டர் தஜாமுல்ஹேக் கூறியபடி, பின்தங்கிய பகுதிகளில் தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்வது, தொழில்முன்னேற்றத்தை ஊக்குவித்து மாநிலம் வளர்ச்சிப்பெற வகைசெய்யும் என்பதை அரசு தாரக மந்திரமாக கொள்ளவேண்டும்.

Next Story