கொரோனாவை விரட்டியடிக்கும் நாள் தூரத்தில் இல்லை


கொரோனாவை விரட்டியடிக்கும் நாள் தூரத்தில் இல்லை
x
தினத்தந்தி 20 April 2020 10:30 PM GMT (Updated: 20 April 2020 5:21 PM GMT)

கொரோனாவை விரட்டியடிக்கும் நாள் தூரத்தில் இல்லை.


உலகம் முழுவதும் கொரோனாவை குணப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்று எல்லா நாடுகளும் முழுமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றன. சீனாவில் உள்ள உகான் நகரில் வவ்வாலை சாப்பிட்ட ஒருவரால்தான் கொரோனா பரவியது என்று உலகம் முழுவதும் நம்பிக்கொண்டு இருக்கிறது. ஆனால் நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஒருவர், இது உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் எய்ட்ஸ் தொற்றுக்கு எதிராக ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தொற்று கிருமிதான் இது. அதுதான் கசிந்து பரவிவிட்டது என்று இப்போது கூறியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள பாக்ஸ் நியூஸ் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம், உகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த நோய்த்தொற்று கிருமி பரவியது என்று செய்தி ஒளிபரப்பி உள்ளது. அமெரிக்கா இதுபற்றி முழு அளவில் விசாரணை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் சீனா இதை முழுமையாக மறுத்துள்ளது. கொரோனாவை எப்படியும் ஒழித்தே ஆகவேண்டும். அந்தவகையில் தமிழக அரசு மிகத்தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் நாடு முழுவதும் சராசரியாக 3.3 சதவீதம் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.1 சதவீதம்தான். அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்களை தேடிப்பிடித்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர்களையும் கண்டுபிடித்து, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதிகளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து, முழு அளவில் மருத்துவப் பரிசோதனை நடத்துவதில் தமிழக அரசு வெற்றிபெற்று இருக்கிறது என்றே சொல்லலாம். பாதிக்கப்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், இதுபோன்ற நோய்கள் உள்ளவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கடந்த சனிக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே ஏற்கனவே பாதித்தவர்கள் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு எந்தவகையிலாவது தொடர்பு கொண்டவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொள்வது அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இந்தியாவிலேயே அதிகமாக குணமடைந்தவர்கள் என்ற மாநிலங்கள் பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் ஆய்வகங்கள் 21 அரசு மருத்துவமனைகளிலும், 10 தனியார் மருத்துவமனைகளிலும் இருக்கின்றன. இதுதவிர, மாநிலம் முழுவதும் எந்தவித அறிகுறியும் இல்லாமல் ஆனால் பாதிக்கப்படலாம் என்ற வகையில் உள்ள இனங்களில் உள்ளவர்களை தேடிக்கண்டுபிடித்து அவர்கள் மூக்கிலும், தொண்டையிலும் உள்ள சளி மாதிரியை எடுத்து பி.சி.ஆர். சோதனைக்கு அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கையில் குத்தி ரத்தம் எடுத்து 25 நிமிடங்களில் அறிவிக்கும் துரிதபரிசோதனை கருவியான ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவி மத்திய அரசாங்கத்தால் 12 ஆயிரமும், தமிழக அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 24 ஆயிரம் கருவிகளையும் வைத்து அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடந்து வருகிறது. இன்னும் ஒரு லட்சம் கருவிகள் சில நாட்களில் வந்துவிடும்.

அரசு என்னதான் முயற்சி எடுத்தாலும், மக்கள் இன்னும் சிலநாட்கள் வீட்டைவிட்டு வெளியேவராமல், அத்தியாவசியத்துக்காக மட்டும் வெளியே செல்ல நேரிடும்போது சமூக இடைவெளியை பின்பற்றி, பாதிக்கப்பட்டிருப்போமோ என்று சந்தேகப்படுபவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு வந்தால், தமிழ்நாட்டில் இருந்து கொரோனாவை நிச்சயமாக விரட்டிவிடலாம். இன்னும் சில நாட்கள் எல்லோரும் கவனமாக இருந்தால் முதல்-அமைச்சர் கூறியதுபோல, கொரோனா நோயால் புதிதாக ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்ற நிலையை நிச்சயம் அடைந்துவிடலாம்.

Next Story