பிரதமர் அறிவித்த 4-வது ஊரடங்கு


பிரதமர் அறிவித்த 4-வது ஊரடங்கு
x
தினத்தந்தி 13 May 2020 10:30 PM GMT (Updated: 13 May 2020 5:20 PM GMT)

பிரதமர் அறிவித்த 4-வது ஊரடங்கு.


பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே டெலிவிஷனில் பேசுகிறார் என்றாலே, என்ன சொல்லப்போகிறாரோ? என்று மனம் திக் திக் என்று படபடக்கும். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் திடீரென்று டெலிவிஷனில் பேசும் போதுதான் யாரும் எதிர்பார்க்காத வகையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதுவும் உடனடியாக நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவித்தார். இதேபோலத்தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபிறகு ஜனதா ஊரடங்கும் சரி, தொடர்ந்து ஊரடங்குகளும் சரி, அவரது டெலிவிஷன் பேச்சுகளில் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பகலில், பிரதமர் இரவு 8 மணிக்கு உரையாற்றப்போகிறார் என்ற உடனேயே மக்கள் மிகுந்த பரபரப்புடன் இருந்தனர். ஆனால், ஏற்கனவே முதல்-மந்திரிகளிடம் காணொலி காட்சியில் சூசகமாக சொன்ன கருத்தை உறுதிபடுத்தும் வகையில், 4-வது ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமாக, புதிய வடிவத்தில், புதிய விதிகளுடன் இருக்கும். விதிகளைப் பின்பற்றி கொரோனாவை எதிர்த்து போராடுகிற அதேநேரத்தில் முன்னேறிச்செல்வோம். முதல்-மந்திரிகளின் கருத்துகளை கேட்டு மே 18-ந்தேதிக்கு முன்பு இதுபற்றி அறிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போரிட்டுக்கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பொருளாதார ரீதியாக முன்னேறிச்செல்ல வேண்டும் என்று கூறிய பிரதமர், ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதாரத்தை ஊக்குவிக்க சுயசார்பு பொருளாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிதி உதவித்தொகை இந்தியாவின் சுயசார்பு நிலைக்கு உந்துசக்தியாக விளங்கும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கு இந்த நிதி உதவி இருக்கும் என்று அறிவித்துள்ளார். இந்த ரூ.20 லட்சம் கோடி செலவிலான பொருளாதார திட்டங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், மீனவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், தொழில் துறையினர் உள்பட அனைவருக்கும் பலன் அளிக்கும் என்று தெரிவித்தார். இந்த திட்டம் ஏற்கனவே அறிவித்த நிதி உதவி தொடர்பான அறிவிப்புகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று அறிவித்தார். அப்படிப்பார்த்தால் ஏற்கனவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1.70 லட்சம் கோடிக்கு நிதி உதவிகளை அறிவித்து இருக்கிறார். ரிசர்வ் வங்கி ரூ.3.74 லட்சம் கோடிக்கு நிதி உதவி அறிவித்துள்ளது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியால் ரூ.50 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஏறத்தாழ ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு அதாவது, 3.4 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு ஏற்கனவே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆக, மீதமுள்ள ரூ.14 லட்சம் கோடி அளவுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

பிரதமர் கூறியதுபோல, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நேற்று மாலை அறிவித்தார். பிரதமர் பேசும்போது, “இந்த கொடிய தொற்று நாட்டுக்கு பின்னடைவு ஏற்படுத்தாத அளவு வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும். நிபுணர்களும், விஞ்ஞானிகளும் இந்த கொரோனா வைரஸ், வரப்போகும் நீண்ட காலங்களுக்கு நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகத்தான் இருக்கும் என்று ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், கொரோனா நம்மை பிணைய கைதியாக வைத்துக்கொள்ள நாமே விட்டுவிடக்கூடாது. நாம் எப்போதும் முக கவசம் அணிந்து 6 அடி அளவு சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். அதுதான் நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசம்” என்று உறுதிபட தெரிவித்தார். எனவே, ஊரடங்கும் இருக்கப்போகிறது. கொரோனாவும் நீண்டகாலத்துக்கு இருக்கப்போகிறது. வருங்காலங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் வாழ்க்கையின் நடைமுறையாக இன்னும் நீண்டகாலத்துக்கு இருக்கப்போகிறது என்பது மட்டும் பிரதமர் பேச்சில் இருந்து தெளிவாக தெரிகிறது.

Next Story