அரசு நிர்வாகத்தில் இந்து கோவில்கள் வேண்டாம்!


அரசு நிர்வாகத்தில் இந்து கோவில்கள் வேண்டாம்!
x
தினத்தந்தி 25 March 2021 7:11 PM GMT (Updated: 25 March 2021 7:11 PM GMT)

ஆதிகாலத்தில் இருந்தே தமிழ்நாடு இறைபக்தி மிகுந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள், ‘கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

ஆதிகாலத்தில் இருந்தே தமிழ்நாடு இறைபக்தி மிகுந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள், ‘கோவில் இல்லாத ஊரில் குடி இருக்கவேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள். குக்கிராமம் என்றாலும் சரி, அங்கே நிச்சயம் ஒரு இந்து கோவிலாவது இருக்கும். பல ஆன்றோர்கள் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை கோவில்கள் பெயரிலேயே எழுதிவைத்திருந்தார்கள். தற்போது தமிழ்நாட்டில் இந்து கோவில்கள் மட்டும் அரசு நிர்வாகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது. மற்ற மத நிர்வாகங்கள் எல்லாம் அந்தந்த மத கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்து கோவில் நிர்வாகம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது, அந்த கோவில் அமைந்துள்ள பகுதிகளிலிருக்கும் ஆன்றோர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ‘மதசார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டு தலங்களை மட்டும் தன் வசம் வைத்திருப்பதை மாற்றி, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, இந்து கோவில்களின் நிர்வாகம் இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்’ என்று கூறியிருக்கிறது.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் பல நாட்களுக்கு முன்பே, ஒருபடி மேலே போய் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை விடுவித்து பக்தர்கள் நிர்வகிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்து சமய அறநிலையத்துறையே சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 11 ஆயிரத்து 999 கோவில்களில் ஒருநாளில் ஒருகால பூஜை கூட சரியாக நடத்தமுடியவில்லை என்றும், 34 ஆயிரம் கோவில்கள் ஆண்டுக்கு வெறும் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவாய் பெறுவதாகவும், 37 ஆயிரம் கோவில்களில் பூஜைசெய்வது, கோவில்களை தூய்மையாக பராமரிப்பது மற்றும் பாதுகாப்பதற்கு ஒரு கோவிலில் ஒருவர் மட்டுமே இருக்கிறார் என்றும் ஒரு அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தை தாக்கல் செய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 1,200 சாமி சிலைகள் திருட்டுப்போயிருக்கிறது. பல நூற்றாண்டு காலமாக செழிப்பாக பக்தியுடன் பராமரிக்கப்பட்ட கோவில்கள், இப்படி ஒரு அவலநிலையை அடைந்துள்ளது. நம் நாட்டை மதசார்பற்ற நாடு என்கிறோம். அதன் அர்த்தம் என்னவென்றால் அரசாங்கம் மதத்தில் தலையிடக்கூடாது. மதம் அரசாங்கத்தில் தலையிடக்கூடாது. இந்தியாவில் வேறு எந்த மதத்தினருக்கும் இந்த அடிமைத்தனமும், தலையீடும் கிடையாது. அந்தந்த மதத்தினர் அவர்களின் வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கிறார்கள். ஆனால் இந்துக்களின் உரிமையில் மட்டும் இந்த தலையீடு உள்ளது. இது இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் கொடுத்த மத வழிபாட்டு உரிமையை பறிப்பதுபோல ஆகிவிடாதா?’ என்று சமீபத்தில் ஜக்கிவாசுதேவ் கூறியிருக்கிறார். ஜக்கிவாசுதேவ் சொன்னது, நிச்சயமாக எல்லோரையும் சிந்திக்க வைக்கிறது.

பல கோவில்களுக்கு நிறைய சொத்துகள் இருக்கிறது. ஆனால் அவையெல்லாம் அரசின் நிர்வாகத்தில் முறையான வருவாயை ஈட்டவில்லை. மேலும் ‘கோவில் செழித்தால், நாடு செழிக்கும்’ என்பது நமது முன்னோர்கள் கூறிச்சென்ற பொன்மொழியாகும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் எல்லோருக்கும் சமஉரிமையை உறுதிசெய்திருக்கிறது. ஆனால் மற்ற மத வழிபாட்டு தலங்களை மட்டும் அவர்களே நிர்வகிக்கலாம் என்று கூறிவிட்டு, இந்து மத கோவில்களை மட்டும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அடுத்து வரப்போகும் அரசு மற்ற மதங்களை போல இந்துமத கோவில் நிர்வாகங்களையும், இந்து மத பக்தியுள்ள ஆன்றோர்கள், சான்றோர்கள் வசம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை கையில் எடுக்கவேண்டும் என்பதே இந்துக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story