கவனமாக இருக்க வேண்டிய அடுத்த 100 நாட்கள்!


கவனமாக இருக்க வேண்டிய அடுத்த 100 நாட்கள்!
x
தினத்தந்தி 11 Oct 2021 7:57 PM GMT (Updated: 11 Oct 2021 7:57 PM GMT)

கொரோனா தாக்குதலை முறியடிக்க மத்திய-மாநில அரசுகள் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தாக்குதலை முறியடிக்க மத்திய-மாநில அரசுகள் மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் 83 கோடியே 40 லட்சத்து 82 ஆயிரத்து 814 பேரும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 5 கோடியே 78 லட்சத்து 96 ஆயிரம் பேரும் தடுப்பூசி போடும் தகுதியான 18 வயதை எட்டியவர்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிடவேண்டும் என்ற இலக்கில் மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தீவிர முனைப்பில் இருக்கிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் 95 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரத்து 373 தடுப்பூசி டோஸ்கள் போட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 51.2 சதவீதம், 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 20.2 சதவீதம் ஆகும்.

தமிழ்நாட்டில் 5 கோடியே 26 லட்சம் ‘‘டோஸ்’’சுக்கு மேல் தடுப்பூசி போட்டுமுடிக்கப்பட்டுவிட்டது. அடுத்த சில நாட்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசாங்கம் இருக்கிறது. தமிழக அரசும் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வெற்றிகரமாக 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரத்து 375 டோஸ் தடுப்பூசி போட்டுமுடித்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்ற அலட்சியப்போக்கில் மக்களிடையே ஒரு பயமின்மை தெரிகிறது.

அடுத்த 100 நாட்களில் எல்லா மதங்களுக்கும் பண்டிகைகள் வருகின்றன. ஆயுதபூஜை, விஜயதசமி, மிலாது நபி என்று இந்த மாதத்திலும், தீபாவளி, அய்யப்பன் விரதம், கார்த்திகை தீபம் என்று அடுத்த மாதமும், மார்கழி பஜனை, கிறிஸ்துமஸ் என்று டிசம்பர் மாதங்களிலும், ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு, பொங்கல் என்று ஜனவரி மாதத்திலும் என வரிசையாக அடுத்த 100 நாட்களுக்குள் எல்லா மதத்தினருக்கும் பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் கூடிவிடுமோ? என்ற அச்சம் மத்திய அரசாங்கத்துக்கு இருக்கிறது. இந்த காலக்கட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து மீண்டும் உச்சத்திற்கு போய்விடாமல் தடுப்பதை மக்கள்தான் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் எச்சரித்துள்ளார். ‘‘நாம் கவனமாக இல்லாவிட்டால் பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் அதிகமாகிவிடும். இன்னும் இரண்டாவது அலை ஓய்ந்துவிடவில்லை. தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. இன்னும் கொரோனா பரவல் இருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இல்லை என்றால் மீண்டும் அதிகரித்துவிடும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசாங்கம் பண்டிகை காலங்களில் கொரோனா பரவலை தடுக்க 100 நாட்கள் பிரசாரம் மற்றும் தடுப்பு இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு பண்டிகைகளாக மக்கள் கொண்டாட வேண்டும். அதாவது, கொரோனா பரவாமல் பார்த்துக்கொள்ள கூடுமானவரை ஆன்லைன் மூலம் நடக்கும் பிரார்த்தனைகளில் பொதுமக்கள் கலந்துகொள்ளவேண்டும். மாநிலங்களும் அடுத்த 100 நாட்களில் கூடுதல் விழிப்போடு இருக்க வேண்டும். மக்களிடம் இப்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில் ஒரு சோர்வு தெரிகிறது. எனவே, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். கூட்டங்கள் கூடும் இடங்கள்தான் கொரோனா உற்பத்தி இடமாக மாறிவிடுகிறது. எனவே, வழிபாட்டு தலங்களில் கூட்டங்கள் கூடாமல், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாமல் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே, அடுத்த 100 நாட்களில் இன்னும் கூடுதல் கவனத்தோடு மக்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசும் ஒரு பக்கம் தீவிரமாக ஈடுபட்டு மறுபக்கம் கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரித்தால் 100 நாட்களில் கொரோனா பாதிப்பில் பெரும் சரிவை காணமுடியும்.

Next Story