36–வது பிறந்த நாள்: டோனிக்கு வீரர்கள் வாழ்த்து


36–வது பிறந்த நாள்: டோனிக்கு வீரர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 7 July 2017 8:52 PM GMT (Updated: 7 July 2017 8:52 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனிக்கு நேற்று 36–வது வயது பிறந்தது.

கிங்ஸ்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனிக்கு நேற்று 36–வது வயது பிறந்தது. பிறந்த நாளை மனைவி, குழந்தை மற்றும் சக வீரர்களுடன் இணைந்து வெஸ்ட் இண்டீசில் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த டோனி, ஐ.சி.சி.யின் மூன்று கோப்பைகளையும் (20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை) வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். அவருக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோனி என்றால் நினைவுக்கு வருவது அவரது பிரத்கேயமான ஹெலிகாப்டர் ஷாட்டுகள் தான். அதை நினைவுப்படுத்தும் விதமாக இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய ரசிகர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை அளித்த இந்த மனிதருக்கு வாழ்த்துகள். ஹெலிகாப்டர் தொடர்ந்து மென்மேலும் பறந்து எங்களது இதயங்களில் இறங்கட்டும்’ என்று கூறியுள்ளார். ‘மிஸ்டர் ஹெலிகாப்டருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த நாள் சிறந்த நாளாக அமையட்டும் நண்பனே. உனக்காக கேக் காத்திருக்கிறது’ என்று யுவராஜ்சிங் குறிப்பிட்டுள்ளார். இதே போல் சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, மைக்கேல் கிளார்க், முகமது கைப், வி.வி.எஸ்.லட்சுமண், ஹர்திக் பாண்ட்யா, கம்பீர் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள், ரசிகர்களும் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.

இந்திய அணிக்காக 13 ஆண்டுகளாக விளையாடி வரும் டோனி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். 296 ஒரு நாள் போட்டிகளில் 10 சதம் உள்பட 9,496 ரன்களும், 76 இருபது ஓவர் போட்டிகளில் 1,206 ரன்களும் எடுத்துள்ளார்.


Next Story