இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 17 July 2017 10:45 PM GMT (Updated: 17 July 2017 8:32 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 14–ந்தேதி நாட்டிங்காமில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 335 ரன்களும், இங்கிலாந்து 205 ரன்களும் எடுத்தன. 130 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 3–வது நாளில் 9 விக்கெட்டுக்கு 343 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 474 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 4–வது நாளான நேற்று பேட் செய்த இங்கிலாந்து வீரர்கள், தென்ஆப்பிரிக்க பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிதறி ஓடினர். கேரி பேலன்ஸ் 4 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 8 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். அதிகபட்சமாக அலஸ்டயர் குக் 42 ரன்னும், மொயீன் அலி 27 ரன்னும் எடுத்தனர்.

முடிவில் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 44.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 340 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. அதற்கு தென்ஆப்பிரிக்கா வட்டியும், முதலுமாக பதிலடி கொடுத்திருக்கிறது.

தென்ஆப்பிரிக்க தரப்பில் வெரோன் பிலாண்டர், கே‌ஷவ் மகராஜ் தலா 3 விக்கெட்டுகளும், ஆலிவர், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இரு இன்னிங்சையும் சேர்த்து இங்கிலாந்து மொத்தம் 96.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. உள்ளூர் டெஸ்டில் 100 ஓவர்களுக்குள் இங்கிலாந்து அடங்கிப்போனது 2009–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஆல்–ரவுண்டராக ஜொலித்த பிலாண்டர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்காவின் வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3–வது டெஸ்ட் வருகிற 27–ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

Next Story