‘நெருக்கடி சூழ்நிலையில் இருந்து மீண்டு வர நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து


‘நெருக்கடி சூழ்நிலையில் இருந்து மீண்டு வர நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து
x
தினத்தந்தி 3 Sep 2018 11:00 PM GMT (Updated: 3 Sep 2018 9:53 PM GMT)

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது எப்படி? என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

சவுதம்டன்,

இங்கிலாந்துக்கு எதிராக சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 245 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 69.4 ஓவர்களில் 184 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டன் விராட்கோலி 58 ரன்னும், ரஹானே 51 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டி தொடரை இழந்தது. இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.

தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஸ்கோர்போர்டை பார்த்து விட்டு 30 அல்லது 40 ரன்கள் மட்டுமே குறைவாக இருக்கிறோம் என்று நாம் சொல்லலாம். அத்தகைய சூழ்நிலையை களத்தில் இருக்கும் போதே நாம் அறிந்து அதனை சமாளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதனை விடுத்து போட்டி முடிந்த பின்னர் அதனை சொல்வது சரியானதாக இருக்காது. நாம் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுகிறோம் என்பது நமக்கு தெரியும். ஆனால் வெளிநாடுகளில் நாம் போட்டி போட்டு விளையாடுகிறோம். எதிரணிக்கு சவாலாக செயல்படுகிறோம் என்று நமக்கு நாமே திரும்ப, திரும்ப எத்தனை நாட்கள் சொல்லி கொண்டு இருக்க முடியும்.

வெற்றி இலக்கை நெருங்கிய பிறகு அதனை வெற்றிகரமாக கடப்பது எப்படி? என்ற கலையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நெருக்கடியான சூழ்நிலை வருகையில் எந்த மாதிரி செயல்பட்டு அதில் இருந்து மீண்டு வருவது என்பதில் நாம் இன்னும் சற்று அதிகம் கவனம் செலுத்த வேண்டும். போட்டியின் போது நாம் நல்ல நிலையை எட்டிவிட்டால், அதனை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும். எதிரணி சரிவில் இருந்து மீண்டு வர இடம் கொடுக்காத வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் 3 நாட்கள் கடுமையாக போராடி நாம் ஆதிக்கம் செலுத்தினோம். இதேபோல் நாம் தொடரை நன்றாக தொடங்குவது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த தொடரின் தொடக்கத்திலேயே நாம் அச்சமின்றி ஆடி வெற்றிக்காக இடைவிடாமல் போராடி இருக்க வேண்டும். இதுபோன்ற நீண்ட தொடரில் நாம் சரிவில் இருந்து மீண்டும் வர முடியும் என்றாலும், பயமின்றி ஆடி நாம் தொடக்கத்திலேயே முன்னிலை பெற வேண்டும். அதனை விடுத்து எதிரணியை துரத்தி பிடிக்கும் வகையில் செயல்படக்கூடாது.

டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முக்கிய தருணம் எது? என்பதை உணர்வது கடினம். நான் ஆட்டம் இழந்த பிறகு இன்னும் கூடுதல் நேரம் களத்தில் நின்று இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அப்படி செய்து இருந்தால் அந்த நாளில் நாம் அதிக ரன்கள் முன்னிலை பெற்று இருக்க முடியும். அதன் பிறகு நமக்கு சில இணை ஆட்டம் நன்றாக இருந்து இருந்தால் நல்ல முன்னிலையை பெற்று இருக்கலாம். புஜாராவின் அபாரமான ஆட்டத்தால் முடிவில் முதல் இன்னிங்சில் நாம் சிறிய முன்னிலையை பெற முடிந்தது. கேப்டனாக அணியின் ஆட்டத்தில் பெரிய எதிர்மறை அம்சங்கள் இருப்பதாக தெரியவில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம்.

நமது நாட்டில் விளையாடுகையில் பல அணிகள் நமக்கு நெருக்கமாக கூட வந்ததில்லை. வெளிநாட்டில் உள்ளூர் அணிகள் நமக்கு எதிராக போராடி தான் வெற்றியை பெறுகிறார்கள். அஸ்வின் அவரால் முடிந்த அளவுக்கு விக்கெட்டை வீழ்த்த முயற்சித்தார். சரியான இடத்தில் தான் பந்தை பிட்ச் செய்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. நாம் நன்றாக செயல்பட தான் முயற்சித்தோம். ஆனால் சில இன்னிங்சில் நாம் நினைத்தபடி நடக்கவில்லை. மொயீன் அலி சிறப்பாக பந்து வீசினார். அவர் விக்கெட் வீழ்த்துவதற்கு தகுதியானவர். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியை சிறப்பானதாக கருதுகிறேன். எங்கள் அணி சரியான திசையில் பயணிப்பதுடன், நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சுயநலம் இல்லாத வீரர்கள் அணியில் இடம் பிடித்து இருப்பதால் எங்களது வெற்றி எளிதானது’ என்றார்.

Next Story