ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: தமிழக அணி, மத்திய பிரதேசத்துடன் மோதுகிறது


ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: தமிழக அணி, மத்திய பிரதேசத்துடன் மோதுகிறது
x
தினத்தந்தி 31 Oct 2018 11:15 PM GMT (Updated: 2018-11-01T01:23:59+05:30)

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. தமிழக அணி தனது முதலாவது லீக்கில் மத்திய பிரதேசத்துடன் மோதுகிறது.

திண்டுக்கல்,

உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்தியாவில் ஆண்டுதோறும் ரஞ்சி கோப்பை எனப்படும் முதல்தர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு தேசிய அணிக்கான கதவு தானாகவே திறக்கும்.

இதன்படி 85-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 37 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு மாநில அணிக்கும் கட்டாயம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று லோதா கமிட்டி உத்தரவிட்டதை தொடர்ந்து மணிப்பூர், அருணாச்சலபிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, புதுச்சேரி ஆகிய அணிகள் இந்த முறை ரஞ்சி தொடரில் அறிமுகம் ஆகின்றன. இதே போல் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மோதல் போக்கால் ஒதுக்கப்பட்டு இருந்த பீகார் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு திரும்புகிறது.

அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ மற்றும் பி பிரிவில் தலா 9 மணிகளும், சி பிரிவில் 10 அணிகளும், பிளேட் பிரிவில் பீகார் மற்றும் 8 புதிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழக அணி ‘பி’ பிரிவில் ஆந்திரா, பெங்கால், டெல்லி, இமாச்சலபிரதேசம், ஐதராபாத், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.

லீக் சுற்று முடிவில் ஏ, பி பிரிவில் இருந்து 5 அணிகளும், சி பிரிவில் இருந்து 2 அணியும், பிளேட் பிரிவில் இருந்து ஒரு அணியும் கால்இறுதிக்கு முன்னேறும். டாப்-2 குரூப்பில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த சீசனில் சி பிரிவுக்கு தள்ளப்படும். சி பிரிவில் முதல் இரு இடத்தை பெறும் அணிகள் ஏ, பி பிரிவுக்கு தகுதி உயர்வு பெறும். சி-யில் பின்தங்கும் அணி, பிளேட் குரூப்புக்கு தகுதி இறக்கம் செய்யப்படும். அதே சமயம் பிளேட் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சி பிரிவுக்கு ஏற்றமடையும்.

தமிழக அணி இதுவரை 2 முறை (1955 மற்றும் 1988-ம் ஆண்டு) மட்டுமே ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டில் பாபா இந்திரஜித் தலைமையில் களம் இறங்கும் தமிழக அணியில் முரளிவிஜய், அஸ்வின், அபினவ் முகுந்த், விஜய் சங்கர் போன்ற முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அணி தனது முதலாவது லீக்கில் நமன் ஓஜா தலைமையிலான மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நத்தத்தில் (திண்டுக்கல்) இன்று தொடங்கி 4-ந்தேதி வரை நடக்கிறது. 41 முறை சாம்பியனான மும்பை அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பங்கேற்கிறது. நடப்பு சாம்பியன் விதர்பா அணி, மராட்டியத்தை புனேயில் இன்று சந்திக்கிறது.


Next Story