முன்னிலை பெற வரிந்து கட்டும் இந்தியா, ஆஸ்திரேலியா: ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடக்கம்


முன்னிலை பெற வரிந்து கட்டும் இந்தியா, ஆஸ்திரேலியா: ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2018 11:00 PM GMT (Updated: 24 Dec 2018 7:30 PM GMT)

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.

மெல்போர்ன்,

நீண்ட பாரம்பரியமிக்க ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் முன்னிலை பெற வரிந்துகட்டுகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்த டெஸ்டுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு மேலை நாடுகளில் ‘பாக்சிங் டே’ என்று பெயர். ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் களத்தில் சண்டையிடும் நாள் என்று அர்த்தம் கிடையாது. அந்த பெயர் எப்படி வந்தது என்பதற்கு சில சுவாரஸ்யமான காரணங்கள் உண்டு.

*இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை இடுவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.

*முன்பு, தங்களிடம் ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கி அனுப்புவார்கள். இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக சொல்வார்கள்.

*முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்தின்றி நல்லபடியாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் வெற்றி பெற்றதும் அந்த பெட்டி பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் ‘பாக்சிங் டே’ பெயர் உதயமானதற்கு ஒரு காரணமாக கூறப்படுவது உண்டு.

1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அன்றைய தினத்தில் போட்டியை நடத்த இயலாமல் போய் விட்டது. இருப்பினும் 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ அன்று டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி அன்று ஏதாவது ஒரு அணி, அங்குள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்டில் விளையாடிக்கொண்டிருக்கும். இந்த முறை ‘பாக்சிங் டே’யில் இந்திய அணி மல்லுக்கட்ட இருக்கிறது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மெல்போர்னில் தோற்றதில்லை.

இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் முன்னிலை பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பை இந்த டெஸ்ட் உருவாக்கியுள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய், லோகேஷ் ராகுல் இருவரும் சொதப்புவது பின்னடைவாக அமைந்துள்ளது. இவர்களில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதுமுக வீரர் மயங்க் அகர்வால் இடம் பெற வாய்ப்புள்ளது. காயமடைந்த ரோகித் சர்மா தேறி விட்டதால், இந்த டெஸ்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் சுழற்பந்து வீச்சாளர் இடத்தை ரவீந்திர ஜடேஜா நிரப்பக்கூடும். ஆனால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆடும் லெவனில் இடம் பெறுவாரா? என்பது சந்தேகம் தான்.

பெர்த் டெஸ்ட் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது. பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப்பை நீக்கிவிட்டு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படலாம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story