ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது, இந்தியா: மழையால் சிட்னி போட்டி ‘டிரா’ ஆனது


ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது, இந்தியா: மழையால் சிட்னி போட்டி ‘டிரா’ ஆனது
x
தினத்தந்தி 7 Jan 2019 11:30 PM GMT (Updated: 7 Jan 2019 10:51 PM GMT)

சிட்னி டெஸ்டில் கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. புஜாரா 193 ரன்னும், ரிஷாப் பான்ட் ஆட்டம் இழக்காமல் 159 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி மழையால் பெரும் பகுதி பாதிக்கப்பட்ட 4-வது நாளில் 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது மழை பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. உஸ்மான் கவாஜா 4 ரன்னுடனும், மார்கஸ் ஹாரிஸ் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது நாளில் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன.

ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் ஆனதால் வெற்றியுடன் தொடரை முடிக்கலாம் என்று இந்திய வீரர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் நேற்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை மழையால் போட்டி தொடங்கவில்லை.

அதன் பிறகும் மழை தொடர்ந்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆடுகளத்தை ஆய்வு செய்த நடுவர்கள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்திய வீரர் புஜாரா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார். சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் வருணபகவான் இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்.

சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. தொடரை கைப்பற்றிய இந்திய அணியினர் சிட்னி மைதானத்தில் உற்சாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனர். அத்துடன் மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தனர். தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியினர் சோகத்துடன் காணப்பட்டனர்.

டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. 1947-ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, அங்கு தனது 12-வது முயற்சியில் தொடரை வென்று அசத்தி உள்ளது. அதாவது 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தனது நீண்ட கால ஏக்கத்தை தணித்து இருக்கிறது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வழங்கினார். அதனை கேப்டன் விராட்கோலி பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 12-ந் தேதி சிட்னியில் நடக்கிறது.

12 மாத கடின உழைப்புக்கு பலன் கிடைத்து இருக்கிறது -ரவிசாஸ்திரி


இ ந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சிட்னியில் நேற்று அளித்த பேட்டியில், ‘1983-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி 1985-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி எனக்கு பெரிதாக அமையாமல் இருந்து இருந்தால், இந்த வெற்றி தான் எனக்கு மிகவும் திருப்திகரமான வெற்றியாக இருந்து இருக்கும். ஏனெனில் டெஸ்ட் போட்டி தான் உண்மையான சோதனையாகும். கடந்த காலம் என்பது வரலாறு. எதிர்காலம் என்பது புதிர். 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறோம். இப்போதுள்ள நிகழ்காலத்தில் வாழ நான் விரும்புகிறேன். இந்திய அணிக்கு தலைமை ஏற்று இருக்கும் விராட்கோலிக்கு தலை வணங்குகிறேன். எனக்கு தெரிந்தவரை டெஸ்ட் போட்டியில் இந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக விளையாடுவது விராட்கோலியை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. எந்தவொரு சர்வதேச அணியின் கேப்டனும் விராட்கோலியை போல் களத்தில் துடிப்பாக செயல்படுவதை நான் பார்த்ததில்லை. ஆஸ்திரேலிய தொடர் எங்களை பொறுத்தமட்டில் இப்போது தொடங்கவில்லை. கடந்த 12 மாதங்களுக்கு முன்பு நடந்த தென்ஆப்பிரிக்க தொடரிலேயே, ஆஸ்திரேலிய தொடருக்கு நாங்கள் ஆயத்தமாகும் நடவடிக்கையை தொடங்கி விட்டோம். தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்தே நாங்கள் வீரர்களை மாற்றி, மாற்றி களம் இறக்கி கூட்டணி ஆட்டத்தை ஆய்வு செய்தோம். கடந்த 12 மாதங்களாக நாங்கள் கடினமாக உழைத்ததற்கு பலன் கிடைத்தது இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

தென் ஆப்பிரிக்காவில் மட்டும்....

ஆ ஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை ருசிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் 71 ஆண்டு கால ஏக்கத்தை தணித்து விட்ட இந்திய அணிக்கு இன்னும் ஒரே ஒரு நாட்டில் மட்டும் வெற்றி எட்டாக்கனியாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நாடுகளில் இந்திய அணி இதுவரை தென்ஆப்பிரிக்காவில் மட்டும் தொடரை சொந்தமாக்கியதில்லை.



Next Story