இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் 46 சிக்சர்கள் அடிக்கப்பட்டு சாதனை கெய்லின் அதிரடி சதம் வீண்


இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் 46 சிக்சர்கள் அடிக்கப்பட்டு சாதனை கெய்லின் அதிரடி சதம் வீண்
x
தினத்தந்தி 28 Feb 2019 11:15 PM GMT (Updated: 28 Feb 2019 9:26 PM GMT)

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் போட்டியில் மொத்தம் 46 சிக்சர்கள் அடிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

செயின்ட் ஜார்ஜ்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 400 ரன்களை கடப்பது இது 4-வது முறையாகும். அதுவும் 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகே 4 முறையும் அடித்திருக்கிறது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 150 ரன்களும் (77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்), கேப்டன் இயான் மோர்கன் 103 ரன்களும் (88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர்.

பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் சிக்சர் மழை பொழிந்தது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து கட்டி ரசிகர்களை பரவசப்படுத்தினார். 55 பந்துகளில் தனது 25-வது சதத்தை நிறைவு செய்த கெய்ல் 162 ரன்களில் (97 பந்து, 11 பவுண்டரி, 14 சிக்சர்) கிளன் போல்டு ஆனார். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 301 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கார்லஸ் பிராத்வெய்ட்டும், ஆஷ்லே நர்சும் இணைந்து இங்கிலாந்து பவுலர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் 48-வது ஓவரில் எதிர்பாராதவிதமாக வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 5 பந்துகளில் ஆஷ்லே நர்ஸ் (43 ரன்), பிராத்வெய்ட் (50 ரன்), பிஷூ (0), ஒஷானே தாமஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை காலி செய்தார்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்களில் 389 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தோற்றாலும் வெஸ்ட் இண்டீசின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 5 விக்கெட்டுகளும், மார்க் வுட் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கடைசி ஒரு நாள் போட்டி செயின்ட் லூசியாவில் நாளை நடக்கிறது.

4-வது ஒரு நாள் போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 90 ரன்களை தொட்ட போது, சர்வதேச ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 14-வது வீரர், வெஸ்ட் இண்டீஸ் அளவில் 2-வது வீரர் (பிரையன் லாராவுக்கு பிறகு) என்ற மகிமையை பெற்றார். கெய்ல் இதுவரை 288 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 25 சதம் உள்பட 10,074 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட கெய்லுக்கு 19 ஆண்டு 169 நாட்கள் ஆகியிருக்கிறது. 10 ஆயிரம் ரன்களை தொடுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட வீரர் கெய்ல் தான். மேலும் அதிக வயதில் இந்த இலக்கை எட்டியவரும் அவர் தான். அவரது தற்போதைய வயது 39 ஆண்டு 160 நாட்கள்.

* ‘சேசிங்’கின் போது கெய்ல் செஞ்சுரி போட்டும் அந்த அணி தோற்பது இது 4-வது நிகழ்வாகும். 2-வது பேட்டிங்கில் தோல்வியில் முடிந்த ஆட்டங்களில் அதிக சதம் அடித்தவர் கெய்ல் தான்.

* இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 807 ரன்களை குவித்து மலைக்க வைத்தன. ஒரு நாள் போட்டியில் இது 3-வது அதிகபட்சமாகும். 2006-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டத்தில் 872 ரன்களும், 2009-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடந்த இந்தியா-இலங்கை ஆட்டத்தில் 825 ரன்களும் எடுக்கப்பட்டன.

* இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 24 சிக்சரும், இங்கிலாந்து தரப்பில் 22 சிக்சரும் என்று மொத்தம் 46 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. அதிக சிக்சர்கள் விரட்டப்பட்ட ஒரு நாள் போட்டியாக இது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் 38 சிக்சர் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

* இந்த போட்டியில் பவுண்டரி, சிக்சர் மூலம் மட்டும் 532 ரன்கள் திரட்டப்பட்டன. இதுவும் ஒரு சாதனை தான். 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா போட்டியில் இந்த வகையில் 504 ரன்கள் எடுக்கப்பட்டதே முந்தைய அதிகபட்சமாகும்.

* இந்த தொடரில் 3 ஆட்டங்களில் ஆடி 30 சிக்சர் அடித்துள்ள கெய்ல் ஒரு தொடரில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற தனது முந்தைய சாதனையை தகத்தார். அத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை (447 ஆட்டத்தில் 506 சிக்சர்) கடந்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் கெய்ல் சொந்தக்காரர் ஆனார்.

மே 30-ந்தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்த கிறிஸ் கெய்ல், தற்போது தனது முடிவை மறுபரிசீலனை செய்ய தொடங்கி இருக்கிறார். 162 ரன்கள் எடுத்த பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘நான் விளையாடியதில் மிகவும் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும். நான் நிறைய 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். அதனால் 50 ஓவர் போட்டிக்கு திரும்புவது எப்போதும் கடினமாகவே இருக்கிறது. ஒரு வழியாக இப்போது எனது உடல், ஒரு நாள் போட்டிக்கு ஏற்றவாறு பழகி விட்டது. பயிற்சியை இன்னும் கொஞ்சம் தீவிரமாக்கி உடல்தகுதியை சீராக்கி கொண்டால் மேலும் சில காலம் கிறிஸ் கெய்லின் ஆட்டத்தை நீங்கள் பார்க்கலாம். எனது வயது 40-ஐ நெருங்கி விட்டது. ஆனால் ஓய்வு முடிவை நான் கைவிடுவேனா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மெல்ல, மெல்ல முடிவு எடுக்கலாம். ஏற்கனவே ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நான் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளேன். ஒரு நாள் போட்டியிலும் இப்போது அந்த மைல்கல்லை அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கெய்லுக்கு புகழாரம் சூட்டியுள்ள இங்கிலாந்து வீரர் ஜோஸ்ட் பட்லர், ‘கிரிக்கெட்டில் கெய்ல் ஒரு ஜாம்பவான். அவரை போன்று எளிதாக சிக்சர்கள் அடிக்கும் வீரரை நான் பார்த்ததில்லை’ என்றார்.

Next Story