இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 6:50 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 3 ரன் எடுக்க முடியாமல் இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கவுகாத்தி, 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 3 ரன் எடுக்க முடியாமல் இந்திய பெண்கள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கடைசி 20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா–இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாமி பியான்ட் 29 ரன்னும், அமை ஜோன்ஸ் 26 ரன்னும், டேனிலி வியாட் 24 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல், ஹர்லீன் டியோல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. ஹர்லீன் டியோல் 1 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11 ரன்னிலும், அடித்து ஆடிய பொறுப்பு கேப்டன் மந்தனா 39 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்கள் சேர்த்தும், தீப்தி ‌ஷர்மா 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்திய பெண்கள் அணி தோல்வி

இருப்பினும் 3–வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் நிலைத்து நின்று ஆடினார். 18–வது ஓவரில் 2 பவுண்டரியும், 19–வது ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்த அவர் இந்திய அணியின் நெருக்கடியை குறைத்தார். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீராங்கனை கேத் கிராஸ் கடைசி ஓவரை வீசினார். அதில் முதல் 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத பாரதி புல்மாலி 4–வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து களம் கண்ட அனுஜா பட்டீல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். இதனை அடுத்து வந்த ஷிகா பாண்டே கடைசி பந்தை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்தார். மறுமுனையில் நின்ற மிதாலி ராஜூக்கு கடைசி ஓவரில் பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் இந்திய அணியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மிதாலி ராஜ் 32 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 30 ரன்னும், ஷிகா பாண்டே ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக சந்தித்த 7–வது தோல்வி இதுவாகும்.

தொடரை முழுமையாக கைப்பற்றியது

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3–0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 2–1 என்ற கணக்கில் வென்று இருந்தது.


Next Story