2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீசை 45 ரன்னில் சுருட்டி இங்கிலாந்துக்கு அணி அபார வெற்றி


2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீசை 45 ரன்னில் சுருட்டி இங்கிலாந்துக்கு அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 9 March 2019 10:30 PM GMT (Updated: 9 March 2019 6:54 PM GMT)

2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீசை 45 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியத

பாஸ்செட்டரே, 

2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீசை 45 ரன்னில் சுருட்டிய இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

2–வது 20 ஓவர் கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாஸ்செட்டரேவில் இந்திய நேரப்படி நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5.2 ஓவர்களில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5–வது விக்கெட்டுக்கு சாம் பில்லிங்ஸ், ஜோரூட்டுடன் இணைந்தார். இருவரும் அபாரமாக அடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

183 ரன்கள் இலக்கு

அணியின் ஸ்கோர் 114 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. அடித்து ஆடிய ஜோரூட் 40 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ரன்–அவுட் ஆனார். 5–வது விக்கெட்டுக்கு சாம் பில்லிங்ஸ்–ஜோரூட் இணை 82 ரன்கள் சேர்த்தது. நிலைத்து நின்று அதிரடி காட்டிய சாம் பில்லிங்ஸ் 47 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. டேவிட் வில்லி 9 பந்துகளில் ஒரு சிக்சருடன் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல் 5 ரன்னிலும், சாய் ஹோப் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டனர். அந்த சரிவில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் அணி கடைசி வரை மீளவில்லை. பின்னர் வந்த வீரர்களில் அதிகபட்சமாக ஹெட்மயர் 10 ரன்னும், கார்லோஸ் பிராத்வெய்ட் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

இங்கிலாந்து அபார வெற்றி

வெஸ்ட்இண்டீஸ் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்னில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச 20 ஓவர் போட்டி வரலாற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணி எடுத்தது (45 ரன்) 2–வது குறைந்தபட்ச ஸ்கோராகும். 2014–ம் ஆண்டில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 39 ரன்னில் சுருண்டதே மோசமான ஸ்கோராக உள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 2 ஓவர்கள் பந்து வீசி 6 ரன் கொடுத்து 4 விக்கெட்டும், டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. கிராஸ் ஐலெட்டில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பாஸ்செட்டரேவில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story