டெல்லி ஆடுகள பராமரிப்பாளர் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல் ‘உள்ளூர் அணிக்கு ஏற்ற மாதிரி பிட்ச் இல்லை’


டெல்லி ஆடுகள பராமரிப்பாளர் மீது ரிக்கி பாண்டிங் பாய்ச்சல் ‘உள்ளூர் அணிக்கு ஏற்ற மாதிரி பிட்ச் இல்லை’
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 5 April 2019 9:25 PM GMT)

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஆடுகளம் உள்ளூர் அணிக்கு உகந்த மாதிரி இல்லை என்று பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் புகார் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. வேகமின்றி (ஸ்லோ) காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

எளிய இலக்கை ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. அதிரடியாக ஆடிய ஐதராபாத் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ (48 ரன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்விக்கு பிறகு நிருபர்களை சந்தித்த டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் ஆடுகள பராமரிப்பாளர் மீது சாடினார். பாண்டிங் கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தன்மை (பிட்ச்) எங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று சொல்வதே நியாயமாக இருக்கும். போட்டிக்கு முன்பாக ஆடுகள பராமரிப்பாளரிடம் பேசிய போது, முந்தைய ஆட்டங்களை காட்டிலும் இது மிகச்சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று கூறினார். ஆனால் அதற்கு நேர்மாறாக மோசமான பிட்ச்சாகி விட்டது. பந்து குறைந்த அளவே பவுன்ஸ் ஆனதையும், ஆடுகளம் எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதையும் நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

இந்த ஆடுகளம் ஐதராபாத் அணியினருக்கே கன கச்சிதமாக பொருந்தியது. மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும், பந்தை வேகம் குறைத்து வீசக்கூடிய திறமையான வேகப்பந்து வீச்சாளர்களும் அவர்களிடம் உள்ளனர். இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அருமையாக பந்து வீசினர். இத்தகைய ஆடுகளத்தில் பந்தை மெதுவாக வீசும் போது அது ஏறக்குறைய அடிக்க முடியாத பந்துகளாகவே இருக்கும். அடுத்து வரும் ஆட்டங்களுக்கும் ஆடுகளத்தின் போக்கு தொடர்ந்து இது போன்றே இருக்குமே என்றால், ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்க வேண்டியது இருக்கும். மொத்தத்தில் இன்றைய நாளில் இந்த ஆடுகளம் எங்களது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. இது நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை.

ஆடுகளம் மெதுவாக இருந்தாலும் கூட டெல்லி பேட்ஸ்மேன்கள் 160 முதல் 165 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வீரர்கள் ஷாட்களை தேர்வு செய்து அடித்த விதம் மோசமாக இருந்தது. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது முக்கியம்.

மேலும் இது தான் எங்களது சொந்த ஊர் ஆடுகளம். எனவே இங்குள்ள சீதோஷ்ண நிலையில் எதிரணியை விட எப்படி சிறப்பாக செயல்படுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இதுவரை இங்கு நடந்துள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெளியூர் அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதனால் நிச்சயம் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு பாண்டிங் கூறினார்.

பாண்டிங்கின் குற்றச்சாட்டு குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘எனக்கு தெரிந்த மட்டில், இந்த ஆடுகளம் எந்த மாதிரி இருக்கும் என்பதை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த பிட்ச் ஒருங்கிணைப்பாளரிடம் தான் பாண்டிங் கேட்டு அறிந்துள்ளார். ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த பிட்ச் பராமரிப்பாளர்கள் யாரும் பாண்டிங்கிடம், இது வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமாக இருக்கும் என்று சொல்லவில்லை. இந்த விஷயத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிட்ச் ஒருங்கிணைப்பாளர் பாண்டிங்கை தவறாக வழிநடத்தி விட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த நபர், பிட்ச் பராமரிப்பாளருக்குரிய தகுதி படைத்தவர் கிடையாது’ என்றார்.

இந்த ஆட்டம் முடிந்ததும் டெல்லி பிட்ச் பராமரிப்பாளர் அங்கித் தத்தாவிடம் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த உள்ளூர் ஆட்டத்திற்கு முன்பாக (ஏப்ரல் 18-ந்தேதி) முடிந்த வரை ஆடுகளத்தன்மையை மாற்ற முயற்சிப்பதாக டெல்லி அணிக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Next Story