‘டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும்’ ஷேவாக் சொல்கிறார்


‘டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும்’ ஷேவாக் சொல்கிறார்
x
தினத்தந்தி 14 April 2019 12:51 AM GMT (Updated: 14 April 2019 12:51 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து ராஜஸ்தானை வீழ்த்தியது.

புதுடெல்லி,

முன்னதாக கடைசி ஓவரின் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார். டோனியின் இந்த செயலை இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பிஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சித்தனர். இது குறித்து விசாரித்த ஐ.பி.எல். அமைப்பு டோனிக்கு, போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

இந்த சர்ச்சை குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக்கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். டோனி, இந்திய அணிக்கு ஏராளமான பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான விஷயம் தான். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

Next Story