ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது?


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது?
x
தினத்தந்தி 2 May 2019 10:44 PM GMT (Updated: 2 May 2019 10:44 PM GMT)

கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளியுடன் உள்ளன.

கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளியுடன் உள்ளன. இவ்விரு அணிகளும் தங்களது கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி ஏறக்குறைய போட்டியை விட்டு வெளியேறி விடும்.

கொல்கத்தா அணி ஆந்த்ரே ரஸ்செல்லை தான் (50 சிக்சருடன் 486 ரன்) அதிகமாக நம்பி இருக்கிறது. சிறிது நேரம் நின்றாலும் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்துவதில் ரஸ்செல்லை மிஞ்ச முடியாது. பேட்டிங்கில் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அவர் தான் பஞ்சாப் பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின், சுப்மான் கில்லும் பார்மில் இருப்பது கொல்கத்தாவின் பேட்டிங்குக்கு மேலும் வலுவூட்டுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. ரன்ரேட்டையும் (தற்போது ரன்ரேட் -0.296) வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். கிறிஸ் கெய்லும் (448 ரன்), லோகேஷ் ராகுலும் (520 ரன்) முக்கியமான இந்த ஆட்டத்தில் அணியை நிமிர வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சொந்த ஊரில் ஆடுவது பஞ்சாப் அணிக்கு சாதகமான அம்சமாகும். ஏனெனில் உள்ளூரில் இந்த சீசனில் ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் கொல்கத்தா ஈடன்கார்டனில் சந்தித்த ஆட்டத்தில் கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பஞ்சாப் அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். (நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story