காலில் ரத்த வழிந்தபடி விளையாடிய வாட்சன்: நெகிழ்ச்சியுடன் பாராட்டும் ரசிகர்கள்


காலில் ரத்த வழிந்தபடி விளையாடிய வாட்சன்: நெகிழ்ச்சியுடன் பாராட்டும் ரசிகர்கள்
x
தினத்தந்தி 14 May 2019 6:13 AM GMT (Updated: 14 May 2019 6:13 AM GMT)

காலில் அடிபட்ட போதும், யாரிடமும் சொல்லாமல் அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடிய வாட்சனின் விடா முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐதரபாத்,

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. கடைசி பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர் விக்கெட்டை மலிங்கா எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதிரடியாக ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த ஷேன் வாட்சனின் சிறப்பான பேட்டிங் சென்னை அணிக்கு பலன் அளிக்காமல் வீணானது. 

இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் தோற்றபோதிலும், அந்த அணி வீரர் ஷேன் வாட்ஸன் செயல்  நெட்டிசன்கள் மத்தியிலும், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் புகழப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.   ஷேன் வாட்ஸன் எந்த சூழலில் அணிக்காக விளையாடினார் என்பதை சிஎஸ்கே  ஹர்பஜன் சிங் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வாட்ஸன் முழங்காலில் ரத்தத்துடன் பேட் செய்த காட்சிக்கான புகைப்படத்தையும் ஹர்பஜன் பதிவிட்டு இருந்தார். 

அதில், ஷேன் வாட்ஸன் ரன் அவுட் செய்யப்படும் போது தாவியதால், முழங்காலில் காயம் ஏற்பட்டது.அந்தக் காயத்தால் வாட்ஸனின் முழங்காலில் ரத்தம் சொட்டியது. அந்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல், முதலுதவி கூட எடுத்துக்கொள்ளாமல் வாட்ஸன் விளையாடியுள்ளார். வாட்ஸன் ஆட்டமிழந்து வந்தபின் அவருக்கு இடது முழங்காலில் 6 தையல்கள் போடப்பட்டன” என்று ஹர்பஜன் சிங்  குறிப்பிட்டு இருந்தார். 

அணியின் வெற்றிக்காக வாட்சன் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வை, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். காலில் ரத்தக்கறையுடன் வாட்சன் பேட் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

Next Story