முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து


முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 3 Nov 2019 11:17 PM GMT (Updated: 3 Nov 2019 11:17 PM GMT)

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஆட்டம் சிட்னியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய புதிய கேப்டன் பாபர் அசாம் 59 ரன்களுடன் (38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.

பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி ஆஸ்திரேலியாவுக்கு 15 ஓவர்களில் 119 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா 3.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது.

தொடர்ந்து மழை கொட்டியதால் இந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இன்னும் 11 பந்துகள் வீசப்பட்டிருந்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கும். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களுடனும் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் வார்னர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிந்ததும் 20 நிமிடங்கள் இடைவெளிவிடப்பட்டது. ஏற்கனவே மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்ட நிலையில், இடைவெளி இவ்வளவு நேரம் தேவையா? என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கேள்வி எழுப்பினார். இது போன்ற சூழலில் 20 நிமிடங்கள் இடைவெளியை 10 நிமிடங்கள் வரை போட்டி நடுவர் குறைக்கலாம். ஆனால் போட்டி நடுவர் அதை செய்யவில்லை. 2-வது ஆட்டம் கான்பெர்ராவில் நாளை நடக்கிறது.


Next Story