ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா-பெங்கால் மோதும் இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா-பெங்கால் மோதும் இறுதி ஆட்டம் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 9 March 2020 12:15 AM GMT (Updated: 9 March 2020 12:15 AM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், சவுராஷ்டிரா-பெங்கால் மோதும் இறுதி ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.

ராஜ்கோட்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ராஜ்கோட்டில் இன்று தொடங்கும் இறுதி ஆட்டத்தில் (5 நாள் ஆட்டம்) ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை சந்திக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா திரும்பியிருப்பது சவுராஷ்டிராவின் பேட்டிங்கை வலுப்படுத்தியுள்ளது.

1950-51-ம் ஆண்டு சவுராஷ்டிரா பெயரில் அந்த அணி உருவான பிறகு ரஞ்சி கோப்பையை வென்றதில்லை. கடந்த 8 ஆண்டுகளில் 4-வது முறையாக இறுதிசுற்றை எட்டியிருக்கும் சவுராஷ்டிரா இந்த தடவை மகுடம் சூடுவதற்கு வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இந்த சீசனில் 65 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அவர் இன்னும் 4 விக்கெட் எடுத்தால் அது புதிய சாதனையாக அமையும்.

அதே சமயம் 30 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பெங்கால் அணிக்கு விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் வருகை பலம் சேர்க்கும். பெங்கால் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரிக்கு இது 100-வது ரஞ்சி ஆட்டம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story