கொரோனா வைரஸ் அச்சம்: பந்தில் எச்சில் தேய்ப்பது தவிர்க்கப்படுமா? - புவனேஷ்வர்குமார் பதில்


கொரோனா வைரஸ் அச்சம்: பந்தில் எச்சில் தேய்ப்பது தவிர்க்கப்படுமா? - புவனேஷ்வர்குமார் பதில்
x
தினத்தந்தி 12 March 2020 12:09 AM GMT (Updated: 12 March 2020 12:09 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பந்தில் எச்சில் தேய்ப்பது தவிர்க்கப்படுமா என்பது குறித்து இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் பதில் அளித்துள்ளார்.


இந்தியா, தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அணியின் மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ‘ஸ்விங்’ செய்வதற்காக பந்தை எச்சில் மூலம் அடிக்கடி தேய்த்து அதை பளபளப்பாக்கும் யுக்தியை வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்கொள்வார்கள். அதை கூட முடிந்த அளவுக்கு தவிர்க்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கொரோனா தாக்கம் எதிரொலியாக பந்தில் எச்சில் தேய்ப்பதை தவிர்ப்பது குறித்து சிந்தித்தோம். ஆனால் எச்சிலை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. உமிழ்நீரை பயன்படுத்தாமல் எப்படி பந்தை பளபளப்பாக்க முடியும்? அதுமட்டுமின்றி பந்து வீச்சை எதிரணியினர் அடித்து நொறுக்கும் போது, உங்களது பவுலிங் சரியில்லை என்று விமர்சிக்க தொடங்கி விடுவார்கள். ஆனால் இது பயனுள்ள ஆலோசனை தான். அணி நிர்வாகம், அணியின் மருத்துவர் வழங்கும் ஆலோசனைகளை பின்பற்றுவோம்.

கொரோனா பரவாமல் இருக்க இப்போதைக்கு எதை செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சொல்லி இருக்கிறார்கள். ‘எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், ரசிகர்களை அதிகமாக நெருங்கக்கூடாது’ போன்ற விஷயங்களை கூறியுள்ளனர். அதே சமயம் நாங்கள் ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் எங்களை நேசிக்கிறார்கள். ஆதரவாக இருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு அவர்களை நெருங்குவதை தவிர்க்க முயற்சிப்போம்.’ என்றார்.

தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயின்டான் டி காக் கூறுகையில், ‘நாங்கள் இந்தியாவுக்கு வந்த போது, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று பரிசோதனை செய்தார்கள். எங்களது அணியின் மருத்துவர்களும், நிர்வாகமும் வீரர்கள் அனைவரும் முழு ஆரோக்கியத்துடன் உள்ளனர். யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே எச்சிலால் பந்தை தொடர்ந்து பளபளப்பாக்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார். கூடுமான வரைக்கும் எதிரணி வீரர்கள், ரசிகர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்கும்படி தென்ஆப்பிரிக்க வீரர்களை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story