இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் சம்மதம்


இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் சம்மதம்
x
தினத்தந்தி 17 May 2020 11:36 PM GMT (Updated: 17 May 2020 11:36 PM GMT)

இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

லாகூர், 

உலகம் முழுவதும் பரவிவிட்ட ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் விளையாட்டு உலகை ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கடந்த மார்ச் 13-ந்தேதிக்கு பிறகு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. கொரோனா பீதியால் இந்த தொடர் தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே சில சர்வதேச தொடர் ரத்து மற்றும் கவுண்டி போட்டிகளை நடத்த முடியாத சூழலால் நிதி நெருக்கடியில் தவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் தொடரை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த நாட்டு நிர்வாகிகள் ‘வீடியோ லிங்க்’ மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். உயரிய பாதுகாப்பு, ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட ஸ்டேடியத்தில் போட்டி, மைதானத்தை ஒட்டியுள்ள ஓட்டலில் தங்கும் வசதி போன்ற உத்தரவாதங்களை இங்கிலாந்து தரப்பில் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு சென்று விளையாடுவதற்கு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால் வீரர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். ஒரு வீரர் இங்கிலாந்துக்கு செல்ல தனக்கு விரும்பம் இல்லை என்று கூறினால், அதை ஏற்றுக்கொள்வோமே தவிர, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது. ஒவ்வொரு வீரர்களும் இந்த தொடரில் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணியை சேர்ந்த 25 வீரர்கள் ஜூலை முதல் வாரத்தில் விமானம் மூலம் அங்கு செல்வார்கள். இங்கிலாந்துக்கு சென்றதும் வீரர்கள் 2 வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மான்செஸ்டர், சவுதம்டனில் டெஸ்ட் தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளது. இன்னொரு இடத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும். உயர்மட்ட மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இங்கிலாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் முழுவதும் வீரர்களுடன் எங்களது மருத்துவ குழுவினர் உடன் இருப்பார்கள். அனைத்து வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவ்வப்போது உடல் வெப்பநிலை சோதிக்கப்படும். அடுத்த வாரத்தில் அசார் அலி (டெஸ்ட் கேப்டன்), பாபர் அசாம் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன்) ஆகியோருடன் பேசுவேன். இங்கிலாந்து தொடரில் எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை விளக்குவேன். அதற்கு முன்பாக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இந்த தொடருக்கு அனுமதி கேட்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story