‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்


‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Jun 2020 11:28 PM GMT (Updated: 2 Jun 2020 11:28 PM GMT)

இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிங்ஸ்டன், 

அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவரை கடந்த வாரம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்து செல்ல முற்பட்ட போது நடந்த பிரச்சினையில் வெள்ளை இன போலீஸ் அதிகாரி ஒருவர் முழங்காலால் கழுத்தில் அழுத்தியதில் அந்த கருப்பு இனத்தவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். போலீஸ் அதிகாரியின் காலுக்கு அடியில் சிக்கியபடி கருப்பு இனத்தவர் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் கொடூர மரணத்துக்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லும் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கருப்பு இன மக்களின் வாழ்க்கையும் மற்றவர்களை போன்றது தான். கருப்பு இனமக்களை முட்டாள்களாக நினைக்க வேண்டாம். இனவெறி பிடித்தவர்களுக்காக வேலை செய்வதை கருப்பு இனமக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். நான் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். நான் சென்ற பல இடங்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் கேலி, கிண்டல் என்று இனவெறி தாக்குதலை சந்தித்து இருக்கிறேன். இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் இருக்கிறது. கருப்பு சக்தி வாய்ந்தது. கருப்பு எனது பெருமை’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமியும் இனவெறிக்கு எதிராக தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், ‘கருப்பு இன சகோதரனின் கழுத்தில் இனவெறியுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை வைத்து அழுத்தும் வீடியோவை பார்த்த பிறகும் கிரிக்கெட் உலகம் இந்த அநீதிக்கு எதிராக நிற்கவில்லை என்றால் இனவெறி விஷயத்தில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தான் கருத வேண்டியது இருக்கும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் என்னை போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லையா?. என்னை போன்றவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் பேசமாட்டீர்களா?. இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. இந்த பிரச்சினை தினந்தோறும் நடக்கிறது. தற்போது அமைதியாக இருக்கும் தருணம் அல்ல. இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகினர் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், கருப்பு இனத்தவரின் மரணத்தை கண்டித்து டுவிட்டரில் கருத்து பகிர்ந்து இருக்கிறார். ‘இதுபோன்ற நேரத்தில் அமைதியாக இருப்பதும் துரோகம் தான். உங்களுக்கு நடக்கவில்லை என்பதற்காக இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது‘ என்று அவர் கூறியுள்ளார்.

‘பார்முலா 1‘ கார் பந்தய சாம்பியனான லீவிஸ் ஹாமில்டனும் (இங்கிலாந்து) இந்த சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். அத்துடன் அவர் பார்முலா 1 அமைப்பினர் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story