விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை-உத்தரபிரதேசம் இன்று மோதல்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை-உத்தரபிரதேசம் இன்று மோதல்
x
தினத்தந்தி 14 March 2021 3:41 AM GMT (Updated: 14 March 2021 3:41 AM GMT)

இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி, 

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ‘சாம்பியன்’ பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன. மும்பை அணியில் பொறுப்பு கேப்டன் பிரித்வி ஷா 4 சதம் உள்பட 754 ரன்கள் திரட்டி விஜய் ஹசாரே போட்டியில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை படைத்து நல்ல நம்பிக்கையுடன் உள்ளார். ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே, ஆல்-ரவுண்டர் ஷம்ஸ் முலானி ஆகியோரும் பேட்டிங்கில் அந்த அணிக்கு வலுசேர்த்து வருகிறார்கள். பந்து வீச்சில் தவால் குல்கர்னி (14 விக்கெட்), துஷார் தேஷ்பாண்டே, பிரசாந்த் சோலங்கி, தனுஷ் கோடியன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

கரண் ஷர்மா தலைமையிலான உத்தரபிரதேச அணி அரை இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அந்த அணியில் அக்‌ஷ்தீப் நாத் (332 ரன்கள்), விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் (276), கேப்டன் கரண் ஷர்மா (225) ஆகியோர் பேட்டிங்கில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறார்கள். உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுகையில் மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு அதிக வலுவாக உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்பு உள்ளது. பிரித்வி ஷாவின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே உத்தரபிரதேச அணி வெற்றியை ருசிப்பது குறித்து சிந்திக்க முடியும். 3 முறை சாம்பியனான மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் 2004-05-ம் ஆண்டு இறுதிப்போட்டி ‘டை’யில் முடிந்ததால் தமிழக அணியுடன் இணைந்து கோப்பையை பகிர்ந்து கொண்ட உத்தரபிரதேச அணி 2-வது முறையாக கோப்பையை தன்வசப்படுத்த கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story