‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்குமா மும்பை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்


‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்குமா மும்பை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 4 Oct 2021 10:04 PM GMT (Updated: 4 Oct 2021 10:04 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சார்ஜா,

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. மீதமுள்ள ஒரே ஒரு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா நைட் டைரர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இந்த நிலையில் சார்ஜாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

எழுச்சி பெறுமா மும்பை?

ரோகித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகளை சாய்ப்பதுடன் ரன்ரேட்டிலும் வலுவாக இருந்தால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி மூட்டையை கட்ட வேண்டியது தான்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் மும்பையை வீழ்த்துவதுடன், கடைசி லீக்கில் கொல்கத்தாவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மும்பை அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. சார்ஜாவில் நடந்த அந்த ஆட்டத்தில் மும்பை அணி 129 ரன்களுக்குள் முடங்கியது. வலுவான மும்பை அணியின் பேட்டிங் நிலையற்றதாக இருப்பதால் இந்த சீசனில் தள்ளாடி வருகிறது. ரோகித் சர்மா (341 ரன்கள்), குயின்டான் டி காக் (297 ரன்கள்) ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தாலும், அந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அதிரடி காட்டினால் தான் அந்த அணி முந்தைய தோல்வியில் இருந்து எழுச்சி பெற முடியும். பந்து வீச்சில் அந்த அணி மெச்சும் வகையில் செயல்பட்டு வருகிறது.

நம்பிக்கையுடன் ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணி கடந்த லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வலுவான சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. சென்னை அணி நிர்ணயித்த 190 ரன் இலக்கை 17.3 ஓவர்களில் விரட்டிப்பிடித்து அசத்தியது. அந்த வெற்றி ராஜஸ்தான் அணியின் நம்பிக்கையை அதிகரித்து இருக்கும்.

ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (480 ரன்கள்), ஜெய்ஸ்வால் (237 ரன்கள்), ஷிவம் துபே (209 ரன்கள்), இவின் லீவிஸ் (127 ரன்கள்) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. அவர்கள் ஜொலிக்க தவறினால் அந்த அணி மும்பைக்கு சவால் அளிப்பது கடினமாகி விடும். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், சேத்தன் சகாரியா நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா? என்பதால் கடுமையாக வரிந்து கட்டுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நடைபெறும் ஆடுகளம் சற்று மெதுவான (ஸ்லோ) தன்மை கொண்டதாகும். இங்கு 150-160 ரன்களே சவாலான ஸ்கோராக இருக்கும். ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணித்து செயல்படும் அணியின் கையே ஓங்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை 12 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 11 ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது.

நேரடி ஒளிபரப்பு

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: இவின் லீவிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஆகாஷ்சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story