மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா
x
தினத்தந்தி 15 Dec 2021 10:26 AM GMT (Updated: 15 Dec 2021 10:26 AM GMT)

அடுத்த ஆண்டு நடைப்பெற இருக்கும் மகளிர் உலகக்கோப்பை போட்டியின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது .

துபாய் ,

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி அடுத்த வருடம்  மார்ச் 4 ஆம் தேதி நியூசிலாந்தின்  டவுரங்காவில் தொடங்கும் முதல் போட்டியில்  தொடரை நடத்தும் நியூசிலாந்து , மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

அதை தொடர்ந்து மார்ச் 5 அன்று ஹாமில்டனில் உள்ள செடான் பூங்காவில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலிய அணியை  எதிர்கொள்கிறது . இதை தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி   டவுரங்காவில் நடைபெறும் போட்டியில் இந்திய மகளிர் அணி  பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது,

எட்டு அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. ஆக்லாந்து, கிறிஸ்ட்சர்ச், டுனெடின், ஹாமில்டன், டௌரங்கா மற்றும் வெலிங்டன் ஆகிய ஆறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து மற்றும் இந்தியா  ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தரவரிசையின்   அடிப்படையில் இந்த தொடருக்கு  தகுதி பெற்றன. இந்த போட்டி லீக் முறையில் நடைபெறும், இதில் எட்டு அணிகளும் ஒரு முறை நேருக்கு நேர் மோதும், அதன் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

முதல் அரையிறுதிப் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் மார்ச் 30ஆம் தேதியும், கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் இரண்டாவது அரையிறுதியும் (மார்ச் 31), இறுதிப் போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதியும்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று  காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின்  தகுதிச் சுற்று நிறுத்தப்பட்டது . இதனால் தரவரிசையில் அடுத்தடுத்து இருக்கும்  வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்  இந்த தொடருக்கு தகுதி பெற்றது.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்து இருந்தது . யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதி போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story