ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை எடுத்துக்கொண்ட பாக். கிரிக்கெட் வீரர்: 2 மாதம் ஓய்வெடுக்க அறிவுரை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Dec 2021 12:25 PM GMT (Updated: 23 Dec 2021 12:25 PM GMT)

சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கராச்சி,

பாகிஸ்தானை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான அபித் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உள்பட 1180 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்த நிலையில், 34 வயதான அபித் அலி  குயாய்ட்-இ-ஆசாம் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானின் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்ட பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் "அக்யூட் கரோனரி சிண்ட்ரோம்" எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்தனர். அதாவது அவரது இதயத்தின் ஒரு பகுதிக்கு செல்லும்  இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

இதனையடுத்து அவர் இதய நோய்க்கான ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர் இரண்டு மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறை கூறி உள்ளனர். 


Next Story