நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி; இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று அசத்தல்!


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி; இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று அசத்தல்!
x
தினத்தந்தி 24 Feb 2022 7:19 AM GMT (Updated: 24 Feb 2022 7:19 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குயின்ஸ்டவுன்,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில், ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகளாக களம் புகுந்த கேப்டன் சோபி டிவைன், சுசி பேட்ஸ் ஆகியோர் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்து நல்ல தொடக்கம் கண்டனர். 

252 ரன்கள் இலக்கு

பின்னர் வந்த, அமெலி கெர் 75 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 66 ரன்கள் விளாசினார். இதனால் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் கெய்க்வாட், தீப்தி ஷர்மா, சிநேகா ராணா தலா 2 விக்கெட்டும், மேக்னா சிங், பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 84 பந்துகளில் 9 பவுண்டரிகளை விளாசி 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் அமெலி கெர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இந்தியா வெற்றி

கடைசி கட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் 66 பந்துகளில் 63 ரன்கள்(1 சிக்ஸ், 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் மிதாலி ராஜ் 66 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

கடைசியில், இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியில் ஹேலி ஜென்சன், ஹன்னா ரோவ், பிரான் ஜோனாஸ் மற்றும் அமெலி கெர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

ஸ்மிரிதி மந்தனா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர் நாயகன் விருதை அமெலி கெர் வென்றார்.

இதன் மூலம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி20 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Next Story