நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90/1


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90/1
x

image courtesy: England Cricket twitter

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நாட்டிங்காம்,

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 81 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 67 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில், 2-வது நாளான நேற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தினர். மிட்செல், பிளன்டெல் இருவரும் தங்களது 3-வது சதத்தை நிறைவு செய்தனர். அணியின் ஸ்கோர் 405-ஆக உயர்ந்த போது பிளன்டெல் 106 ரன்களில் (198 பந்து, 14 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.மிட்செல்-பிளன்டெல் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

டெஸ்டில் 5-வது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் இதுதான். இதற்கு முன்பு நாதன் ஆஸ்டில்- கிரேக் மெக்மில்லன் இணை 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 222 ரன்கள் எடுத்ததே அந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

இதற்கிடையே, 104 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய டேரில் மிட்செல் அதன் பிறகு அதிரடியாக விளையாடி துரிதமாக ரன்கள் திரட்டினார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 190 ரன்களில் (318 பந்து, 23 பவுண்டரி, 4 சிக்சர் ) கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆனார். பிரேஸ்வெல் 49 ரன்கள் எடுத்தார். முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2 வது ஓவர் முடிவில் 4 ரன்களில் சாக் கிராலி ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 26 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் லீசு 34 ரன்கள் மற்றும் ஓலி போப் 51 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


Next Story