பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி வீரர்களின் பயணத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு


பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி வீரர்களின் பயணத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு
x

இங்கிலாந்து அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கராச்சி,

7 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது. கராச்சியில் வந்திறங்கிய இங்கிலாந்து வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு செல்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2005-ம் ஆண்டில் அங்கு ஆடிய இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை இழந்து வெறுங்கையுடன் நாடு திரும்பியது. அதன் பிறகு பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு அச்சம் காரணமாக பாகிஸ்தான் செல்வதை தவிர்த்தது. கடந்த ஆண்டு கூட பாதுகாப்பு பிரச்சினை எதிரொலியாக கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணி பயணத்தை ரத்து செய்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான ஏழு 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலாவது ஆட்டம் வருகிற 20-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.

போட்டி நடக்கும் நாட்களில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து ஸ்டேடியம் வரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அந்த பகுதி ஆயுதப்படை போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். வீரர்களின் பயணத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story