முதல் ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி


முதல் ஒருநாள் போட்டி:  பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி
x

Image Courtesy: ICC Twitter

முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

கெய்ர்ன்ஸ்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 46 ரன்னும், வில்லியம்சன் 45 ரன்னும், லதாம் 43 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து தடுமாறியது.

அந்த அணியில் பின்ச் ( 5 ரன் ), வார்னர் ( 20 ரன் ), ஸ்மித் ( 1 ரன் ), லபுஸ்சேன் ( 0 ), ஸ்டோய்னிஸ் ( 5 ரன் ) எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி மிகவும் தடுமாறியது. இதையடுத்து 6 விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் க்ரீன் களம் இறங்கினர். இந்த ஜோடி மிகச்சிறப்பாக ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர்.

இறுதியில் அனியின் ஸ்கோர் 202 ஆக உயர்ந்த போது சதத்தை நெருங்கிய அலெக்ஸ் கேரி 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். கேரி - க்ரீன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களம் இறங்கிய அதிரடி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகியோர் முறையே 2 ரன், 1 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் க்ரீன் அவுட் ஆகாமல் 89 ரன்கள் குவித்தார். அலெக்ஸ் கேரி 85 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்ட்ரி, லாக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற முன்னிலை வகிக்கிறது. இந்த அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 8-ந் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.


Next Story